கொரானா அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில், ஐபிஎல் உள்ளிட்ட எந்த விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 200 பேருக்கு மேல் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகள் நடத்த அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இதனால், ஐபிஎல்-2020 சீசன் ஒட்டு மொத்தமாக ரத்து செய்யப்படும் என தெரிகிறது.
கொரானா வைரஸ் பீதி, எந்த ஒரு துறையையும் விட்டு வைக்கவில்லை. இப்போது, உலக அளவில் பல்வேறு முக்கிய விளையாட்டுப் போட்டிகளும் அடுத்தடுத்து ரத்து செய்யப்படுகின்றன. மக்கள் அதிகம் கூடுவதை கட்டுப்படுத்தினாலே, கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தலாம் என கூறப்பட்டு வரும் நிலையில், பிரபலமான விளையாட்டுப் போட்டிகளை காண பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது.
இதனால் இந்த மாதம் இறுதியில் மார்ச் 29-ல் தொடங்கி 50 நாட்களுக்கு நடைபெற உள்ள ஐபிஎல்2020 தொடருக்கும் சிக்கல் எழுந்துள்ளது. ஐபிஎல் போட்டிகளை பார்வையாளர்கள் இன்றி நடத்த மத்திய விளையாட்டு அமைச்ச சகம் நேற்று அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், டெல்லி அரசோ, கொரானா பிரச்னை தீரும் வரை டெல்லியில் ஐபிஎல் உள்ளிட்ட எந்த விளையாட்டுப் போட்டிகளோ, 200 பேருக்கும் மேல் கூடும் பொது நிகழ்ச்சிகளோ நடத்த தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதனை டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த ஐபிஎல் சீசனில் டெல்லியில் மட்டும் 7 போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்கனவே பெங்களுரு மற்றும் மும்பையில் போட்டிகள் நடத்த எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையிலும், இந்த ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்பதும் சந்தேகம் என்ற நிலையில் இந்த ஐபிஎல்-2000 தொடர் ஒட்டு மொத்தமாக ரத்து செய்யப்படும் வாய்ப்புகளே அதிகம் என்று கூறப்படுகிறது.