டாஸ்மாக் சரக்கு பாட்டிலில் மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு என்று அச்சிட்டு விட்டு, அரசே விற்கலாமா? என்று திமுக தரப்பில் கேள்வி எழுப்பியதற்கு, உங்க ஆட்சியில மட்டும் திருக்குறள் வாசகத்தையா அச்சிட்டு விற்பனை செய்தீர்கள் என்று அமைச்சர் தங்கமணி பதில் கேள்வி எழுப்ப சட்டசபையில் சிறிது நேரம் சலசலப்பே ஏற்பட்டுவிட்டது.
தமிழக சட்டப்பேரவையில் மான்யக் கோரிக்கைகளின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று மின்சாரம் மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை மீதான விவாதம் நடைபெற்றது. அமைச்சர் தங்கமணி விவாதங்களுக்கு பதிலளித்தார். அப்போது, டாஸ்மாக் கடைகளில் சரக்கு விற்பனை அதிகமாகி வருவது பற்றியும் கடைகளின் எண்ணிக்கை குறித்தும் காரசார விவாதம் நடைபெற்றது.
விவாதத்தின் போது பேசிய திமுக எம்எல்ஏ, மதுபாட்டில்களில் மது – நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு என்ற வாசகத்தை அச்சிட்டு விட்டு அரசே விற்கலாமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்க எழுந்த அமைச்சர் தங்கமணி, 2006-2011 காலக்கட்டத்தில் திமுக ஆட்சியில் மதுபாட்டில்களில் திருக்குறள் வாசகத்தையா அச்சிட்டு விற்றீர்கள்? என பதில் கேள்வி எழுப்ப, சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பும் சலசலப்பும் எழுந்தது.
கடந்த கூட்டத்தொடரிலும் இதே போன்ற ஒரு கேள்விக்கு தமிழகத்தில் குடிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதனால் விற்பனையும் அதிகரித்துள்ளது. அதிகமாக குடிப்பவர்களை என்ன செய்ய முடியும்? தடுக்கவா முடியும்? என அமைச்சர் தங்கமணி பதிலளித்ததும் குறிப்பிடத்தக்கது.
பொதுவாகவே அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஆட்சி புரியும் போது, ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதும் அதற்கு நீங்கள் மட்டும் யோக்கியமா? என்ற ரீதியில் அதற்கு, முன்னர் நடந்த ஒரு சம்பவத்தை சுட்டிக்காட்டி பதிலளிப்பதுமே வழக்கமாக்கிக் கொண்டு விட்டனர். இது தற்போதைய அதிமுக அரசில் கொஞ்சம் அதிகமாகவே உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே மது பாட்டில்களிலும், டாஸ்மாக் கடை பெயர் பலகையிலும் இனிமேல் மது வீட்டுக்கு, நாட்டுக்கு, உயிருக்கு கேடு என்ற வாசகம் இடம் பெறாது என்றும் அதற்குப் பதிலாக புதிய வாசகம் இடம் பெற உள்ளதாக இன்று மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கொள்கை குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அதன்படி புதிய வாசகம் என்ன தெரியுமா? மது “அருந்துவது – உடல் நலனுக்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர்” “மது குடித்துவிட்டு விட்டு வாகனம் ஓட்டாதீர்” என்ற மென்மையாக அறிவுரை கூறுவது போல் வாசகம் இடம் பெற உள்ளது.