கொரானோ அச்சுறுத்தல் எதிரொலி ஐபிஎல் போட்டிகளை பார்வையாளர்கள் இன்றி நடத்த அறிவுறுத்தல்
கொரானோ அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல். உள்ளிட்ட போட்டிகளை பார்வையாளர்கள் இன்றி நடத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
உலகை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரானோ வைரஸ் தாக்குதலின் தாக்கம் மிகப் பெரிய அளவில் வெடித்துள்ளது. வெளிநாட்டு பயணிகள் தங்கள் நாட்டுக்கு வரவேண்டாம் என பல நாடுகளும் தடை விதித்துள்ளன. சர்வதேச விமானப் போக்குவரத்து முடங்கியுள்ளது. மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலா இடங்கள், வழிபாட்டுத் தலங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. திருவிழாக்களும் களையிழந்து காணப்படுகின்றன.
இந்தியாவில் டெல்லி, கேரளா உள்ளிட்ட இடங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. தியேட்டர்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இப்போது கொரானோவின் தாக்கம் விளையாட்டுப் போட்டிகளையும் விட்டு வைக்க வில்லை. இந்தியாவில் விளையாட்டுத் திருவிழா போல்டை பெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வரும் 29-ந் தேதி தொடங்கி ஒன்றரை மாதம் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகளைக் காண மைதானத்தில் திருவிழா போல் ரசிகர்கள் கூடுவது வழக்கம். ஆனால் இந்த முறை கொரானோ அச்சத்தால், விளையாட்டை நேரில் ரசிக்க ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
ஐ.பி.எல். உள்ளிட்ட அனைத்து போட்டிகளுக்கும் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தலை வழங்கியுள்ளதால் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானங்களில் வீரர்கள் மட்டுமே விளையாட, போட்டிகளை நேரலைகளில் மட்டுமே காண முடியும். அது மட்டுமின்றி இந்த ஐபிஎல் சீசனில் வெளிநாடுகளின் வீரர்கள் யாரும் பங்கேற்கப் போவதில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




