அண்ணா அறிவாலயத்தில் 14-ந் தேதி பேராசிரியர் க.அன்பழகன் படத்திறப்பு..!! கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு!!
திமுக பொதுச் செயலாளராக இருந்து மறைந்த பேராசிரியர் க.அன்பழகனின் படத்திறப்பு நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் வரும் 14-ந் தேதி நடைபெறுகிறது. இதில் திமுக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர் களும் பங்கேற்கின்றனர்.
திமுக பொதுச் செயலாளராக 43 ஆண்டுகளாக பதவி வகித்து வந்த பேராசிரியர் க.அன்பழகன் கடந்த சனிக்கிழமை 98 வயதில் காலமானார்.பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் 75 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்த க.அன்பழகன், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவராக திகழ்ந்தார்.
கருணாநிதி மறைவுக்குப் பின் உடலளவிலும், மனதளவிலும் சோர்ந்து காணப்பட்ட க.அன்பழகன் கட்சி நடவடிக்கைகளில் தீவிரம் காட்டவில்லை என்றாலும், அவரது மறைவு திமுகவுக்கும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் பெரும் இழப்பாகவே கருதப்படுகிறது.
இந்த மறைந்த க .அன்பழகனுக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் அவரது படத்திறப்பு நிகழ்ச்சி, வரும் 14-ந் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என திமுக தலைமை கழகம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வரும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் க. அன்பழகன் படத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் உட்பட அனைத்து கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் , பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




