சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து வெளியேறி விடலாம் என யோசிக்கிறேன் என பிரதமர் மோடி டுவிட்டரில் போட்ட ஒரு பதிவு, அவரை பின் தொடர்பவர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்த, “நோ சார்” என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகியுள்ளது.
பிரதமர் மோடி, சமூக வலைதள பக்கங்களான பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாக் ராம், யு டியூப் போன்றவற்றில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். இதனால் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையில் மற்ற அரசியல் தலைவர்களை பல மடங்கு அதிகம். டுவிட்டரில் மட்டும் பிரதமர் மோடியை ஃபாலோ செய்பவர்கள் எண்ணிக்கை 5.5 கோடிக்கும் மேற்பட்டோர் ஆவர்.
இந்நிலையில், நேற்று டுவிட்டரில் பிரதமர் மோடி ஒரு பதிவு போட்டது பலரையும் அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் ஆழ்த்தியது. சமூக வலைதளங்களான டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாக்ராம், யூடியூப் கணக்குகளில் இருந்து வெளியேறுவது குறித்து இந்த ஞாயிற்றுக்கிழமை யோசித்தேன் என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதற்கு, அவரை பின் தொடர்பவர்கள் உடனடி ரியாக்சன் காட்டி வருகின்றனர். இதனால் “நோ சார்” என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பெரும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.குறிப்பாக சமூக வலைதளங்களில் பெரிய அளவில் சிஏஏ குறித்த பதிவுகளும், அலசல்களும், விவாதங்களும் சூடாகியுள்ளன.இந்த நிலையில் பிரதமர் மோடி, சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து வெளியேற யோசித்து வருவதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் இருந்து வெளியேற வேண்டாம் என பிரதமரை வலியுறுத்தி பல லட்சம் பேர் அவருக்கு ஆதரவாக பதிவிட்டு வரும் நிலையில், பிரதமரின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது எனவும் ஒரு தரப்பில் பதிவிட்டு வருகின்றனர்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியோ, முதலில் வெறுப்பை கைவிடுங்கள்; சோசியல் மீடியாவை அல்ல என பதிவிட்டு அட்வைஸ் செய்வது போல தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.