அதிமுக அரசை யாராலும் கலைக்க முடியாது எனவும், ஆட்சிக்கலைப்பு ஒன்றும் கருக்கலைப்பு போன்றது அல்ல என்றும் எச். ராஜாவுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தம் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேசிய குடியுரிமை பதிவேடு தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இவற்றையெல்லாம் கண்ணை மூடி ஆதரவு தெரிவித்த அதிமுக, தற்போது தனது நிலைப்பாட்டில் பின்வாங்குவதாக தெரிகிறது. தேசிய மக்கள்தொகை பதிவேடு தொடர்பாக சில திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப் போவதாகவும் கூட தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக அரசின் இந்த திடீர் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்திருந்த பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, மத்திய அரசுக்கு எதிராக அதிமுக செயல்படும் பட்சத்தில் தமிழக ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும். ஆட்சியும் கலைக்கப்படும் என எச்சரிக்கை விடுவதுபோல் பேசியிருந்தார். எச்.ராஜாவின் இந்தக் கருத்துக்கு அதிமுக தரப்பு மவுனம் சாதிப்பது ஏன்? என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜுவிடம், ஆட்சியைக் கலைப் போம் என எச் .ராஜா கூறிய கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக அரசை யாராலும் கலைக்க முடியாது . ஆட்சிக்கலைப்பு என்ன கருக்கலைப்பு போன்றதா? தமிழகத்தில் எங்களுக்கு மு.க.ஸ்டாலினை விட பெரிய எதிரி வேறு யாரும் இல்லை. அவர் தான் எங்களுடைய முக்கிய எதிரியே. அவராலேயே இந்த ஆட்சியை கலைக்க முடியவில்லை என்று செல்லூர் ராஜூ கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.