இந்தியாவில் 3 பேருக்கு கொரானா..! அச்சப்பட வேண்டாம்!
மத்திய அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் டெல்லியில் ஒருவரும் , தெலுங்கானா மாநிலத்தில் ஒருவரும் என இரண்டு பேர் கொரொனா வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லியில் கொரானா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் இத்தாலியில் இருந்து வந்தவர் என்றும் தெலுங்கானாவில் சிகிச்சை பெறுபவர் துபாயில் இருந்து வந்தவர் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. இதுதொடர்பாக தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கொரானா பாதிப்பு தடுப்பு நடவடிக்கை போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதால் அது குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றார்.
21 விமான நிலையங்கள். 12 பெரிய துறைமுகங்கள், 65 சிறிய துறைமுகங்களில் கொரானா சோதனைக்கு பின்னரே பயணிகள் இந்தியாவிற்குள் அனுமதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். சீனா மற்றும் ஈரானுக்கு விசா வழங்கும் நடைமுறையை ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில் இது மேலும் பல நாடுகளுக்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

சீனா, தென் கொரியா, ஈரான், சிங்கப்பூர், இத்தாலி போன்ற நாடுகளுக்கு கட்டாய தேவை இன்றி இந்தியர்கள் தங்கள் பயணத்தை தவிர்க்குமாறும் ஹர்ஷ்வர்தன் கேட்டுக்கொண்டார். இதனிடையே ராஜஸ்தானில் ஒருவருக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ரகு ஷர்மா தெரிவித்துள்ளார்.
இத்தாலியில் இருந்து கடந்த 29ஆம் தேதி பயணி ஒருவர் ஜெய்ப்பூர் வந்தபோது கொரானா அறிகுறியுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்தார். முதல் சோதனையில் கொரானா இல்லை என தெரிய வந்த நிலையில் இரண்டாவது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




