குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பெல்லியில் பல நாட்களாகவே போராட்ட்ங்கள் நடைபெற்று வந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வருகையின் போது வட கிழக்கு டெல்லியில் வன்முறை வெடித்துள்ளது. இதனால் தலைநகர் டெல்லியில் பதற்றம் ஏற்பட்டு பல இடங்களில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தலைநகர் டெல்லியிலும் தொடர் போராட்ட்ங்கள் நடந்து வருகின்றன. ஷாகீன்பாக் பகுதியில் 70 நாட்களை தாண்டி போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் வடகிழக்கு டெல்லியில், சிஏஏ-க்கு எதிராக இன்று மாலை நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. சிஏஏ எதிர்ப்பு மற்றும் ஆதரவு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலே இந்த வன்முறைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.இந்த வன்முறையின்போது பெட்ரோல் பங்க் ஒன்றுக்கும் தீ வைக்கப்பட்டது.வன்முறையைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். பதிலுக்கு போராட்டக்காரர்கள் சரமாரியாக கற்களை வீசியதால் பதற்றம் அதிகரித்தது.
இந்த கல் வீச்சில் ரத்தன்லால் என்ற போலீஸ் ஏட்டு ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.போராட்டக்காரர்களில் ஒருவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறை துணை ஆணையர் ஒருவரும் படுகாயமடைந்தார்.
இந்த திடீர் வன்முறை சம்பவத்தை அடுத்து வட கிழக்கு டெல்லியில் பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. துணை ராணுவப் படையினரும் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கியமான மெட்ரோ ரயில் நிலையங்கள் பலவும் மூடப்பட்டுள்ளன.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் டெல்லி வருகையின் போது, இந்த வன்முறை திட்டமிட்டே நடத்தப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து விவாதித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.