தமிழக மக்களுக்கு செல்லப்பிள்ளையாக வலம் வரும் சிவகார்த்திகேயன் குறுகிய காலத்தில் ஒரு உயரத்தை அடைந்துள்ளார். மெல்லிய தேகம், மீசையில்லா முகம், கரிய உடல், கலக்கப்போவது யாரு மேடையேறி சிவகார்த்திகேயன் முதன் முறையாக மைக் பிடித்த போது அவர் சொன்ன காமெடிக்கு சிரித்தவர்களை விட அவரை பார்த்து சிரித்தவர்கள் தான் அதிகம்.
எள்ளி நகையாடும் கூட்டம் எதிரில், எப்படியாவது சாதிக்க வேண்டும் என்கிற வெறி மனதில், மிமிக்கிரி, ஆங்கரிங், டான்ஸ் என எல்லா திசையிலும் இறங்கி அடித்துள்ளார். விளைவு வெள்ளித் திரைக்கு வரும் முன்பே வீட்டிற்கு வீடு உருவானது ரசிகர் பட்டாளம்.
திறமைசாலிகளை வாய்ப்புகள் கைவிடுவதில்லை என்பதற்கு உதாரணம் காட்டும் மற்றொரு வெற்றியாளர் ஆனார் எஸ் கே. டிவியில் மையம் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் என்னும் புயல் இயக்குனர் பாண்டிராஜின் கரம்பற்றி மெரினா மூலமாக கரையை கடந்தது. பின்பு 3 படம் மூலமாக முத்திரை பதித்து, மனம் கொத்திபறவையாக வந்து மக்கள் மனதில் கூடுகட்டி வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் மூலம் பட்டி தொட்டியில் பட்டையை கிளப்பினார் இந்த போஸ் பாண்டி.
ஜோக்கராக கிச்சுகிச்சு மூட்டியவர் ஹீரோவாகி கெத்து காட்டிய முதல் படம் எதிர்நீச்சல். மான்கராத்தே, காக்கி சட்டை, வேலைக்காரன், கனா என நாயக பிம்பத்திற்கு நங்கூரம் போடும் படங்களில் ஒருபுறம் நடித்து வந்தாலும், அவ்வப்போது நம்ம வீட்டு பிள்ளையாக தோன்றி ஃபேமிலி ஆடியன்ஸ் பேலன்ஸ் செய்யவும் தவறுவதில்லை சிவகார்த்திகேயன்.
200 ரூபாய் சன்மானத்துடன் வாழ்வைத் தொடங்கிய மிமிக்ரி கலைஞன் ஒருவன் 20 கோடி சம்பளம் பெறும் உச்ச நட்சத்திரமாய் உருவெடுப்பது எல்லாம் சாதாரணம் இல்லை. சிங்கம்புணரி என்னும் சிறு கிராமத்தில் பிறந்து சினிமா எனும் கனவு கோட்டையை தனது கால்தடம் பதிப்பதற்கெல்லாம் அசுர உழைப்பு, அசாத்தியத் துணிச்சல், விடாமுயற்சி இன்னும் சொல்லப்போனால் வெறி இருக்க வேண்டும்.
இல்லையேல் இதுபோன்ற இந்த சாதனைப் பயணம் சாத்தியம் இல்லை. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்கிற சினிமா வசனத்திற்கு சினிமாவிலிருந்து ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறார் சிவகார்த்திகேயன்.