டெல்லி முதல்வராக பதவியேற்கும் கெஜ்ரிவால்
டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பதவி ஏற்கிறார். அவருடன் 6 அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர். ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் இந்த விழாவில் கெஜ்ரிவாலின் கடந்த ஆட்சியில் துணை முதல்வராக இருந்த மணி சிசோடியா, மற்றும் அமைச்சர்களான சத்யேந்திர ஜெயின், கோபால் ராய், கைலாஷ், இம்ரான் உசேன் மற்றும் ராஜேந்திர கௌதம் ஆகியோரும் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.
இதனையொட்டி 8 மணிமுதல் மதியம் இரண்டு மணிவரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. டெல்லி காவல்துறையினர், துணை ராணுவப் படை , மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் உள்ளிட்டோர் சுமார் 3,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். டிரோன் கேமராக்களும் கண்காணிப்பு பணிக்கு பயன்படுத்தப்பட உள்ளன.
ராம்லீலா மைதானம் முழுவதும் சிசிடிவி கேமரா கண்காணிப்பின் கீழ் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இடையே பதவியேற்பு விழாவில் ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி இருப்பதாகவும், இச்செயலை கண்டிப்பதாகவும் கெஜ்ரிவாலுக்கு பாஜக எம்எல்ஏ விஜயேந்திர குப்தா கடிதம் எழுதியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




