டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் 3-வது முறையாக இன்று பதவியேற்றார். அவருடன் 6 அமைச்சர்களும் பதவியேற்றனர். பிரதமர் மோடி மற்றும் டெல்லி பாஜக எம்.பி.க்கள் 7 பேருக்கு அழைப்பு விடப்பட்ட நிலையில் இதில் யாரும் பங்கேற்கவில்லை. என்றாலும் டெல்லியின் பல்வேறு தரப்பு மக்கள் கூட்டத்தின் வெள்ளத்துக்கு இடையே கெஜ்ரிவால் பதவியேற்றார்.
டெல்லியில் கடந்த வாரம் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை ஆம் ஆத்மி கைப்பற்றியது. இதனால் அக்கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் 3-வது முறையாக முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
டெல்லி வாழ் சாமான்ய மக்களின் நம்பிக்கையைப் பெற்ற கெஜ்ரிவால் இப்போது டெல்லியின் மைந்தன் என்று போற்றப்படுகிறார். இன்று ராம்லீலா மைதானத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில் லட்சத்திற்கும் மேற்பட்ட டெல்லி மக்களின் உற்சாக ஆரவாரத்துக்கு இடையே கெஜ்ரிவால் முதல்வராக 3-வது முறையாக பதவியேற்றார். அவருக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் பைஜால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.கெஜ்ரிவாலுடன் துணை முதல்வராக மணீஸ் சிசோடியா, அமைச்சர்களாக சத்யேந்திர ஜெயின், கோபால் ராய், கைலாஷ் கெலாட், இம்ரான் ஹூசைன், ராஜேந்திர கவுதம் ஆகிய 6 பேரும் பதவியேற்றனர்.
பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடி, டெல்லியின் 7 பாஜக எம்.பி.க்கள், டெல்லி எம்எல்ஏக்கள் டெல்லியைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளின் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. டெல்லிக்கு வெளியே உள்ள வேறு மாநிலங்களின் தலைவர்களுக்கு அழைப்பு விடப்படவில்லை.
அதே வேளையில் டெல்லியைச் சேர்ந்த ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள், மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், ஆசிரியர்கள் என மக்கள் சேவையாற்றும் பல்வேறு தரப்பு பணியாளர்களை சிறப்பு அழைப்பாளர்களாக கெஜ்ரிவால் அழைத்திருந்தார். டெல்லி தேர்தல் முடிவின் போது கெஜ்ரிவால் போன்ற வேடமணிந்து உற்சாக துள்ளல் போட்ட சிறுவன் ஒருவனின் புகைப்படமும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த 2 வயது சிறுவன் ஆவியன் டோமருக்கும் சிறப்பு விருந்தினராக அழைப்பு விடப்பட்டு கலந்து கொண்டான். பிரதமர் மோடி மற்றும் பாஜக எம்.பி எம்எல்ஏக்கள் விழாவில் பங்கேற்காத நிலையில் டெல்லி வாழ் சாமான்ய மக்கள் வெள்ளத்தின் நடுவே கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்றார்.