இளைஞர்களின் நலன் கருதி பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் தொழில்நுட்ப யுகத்தில் செல்போனை மையமாகக்கொண்டு மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியை சிவகங்கையில் உள்ள மொபைல் கடை ஒன்று நடத்துகிறது.
அண்மைகாலமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் இளைஞர்களை கட்டிப் போட்டிருக்கும் விளையாட்டுதான் பப்ஜி. ஆக்சன் விரும்பிகளுக்கு வரமாக அமைந்திருக்கும் பப்ஜி விளையாட்டில் இளைஞர்கள் குழுவாக பிரிந்து எதிரிகளை விடுவதுதான் இலக்கு .
பப்ஜி விளையாட்டால் இளைஞர்களின் நேரம் வீணாவது ஒரு பக்கமிருக்க அவர்களுக்குள் இருக்கும் ஆக்கபூர்வமான திறன்களும் மழுங்கி போய் விடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அன்னை மொபைல் ஷாப் கடை சார்பாக மாசிமாத தேர் திருவிழாவை முன்னிட்டு மாநில அளவிலான பப்ஜி போட்டி இன்று நடத்தப்படுகிறது.
முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 50 ஆயிரம் ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி அறிவிப்பு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து கோவை, மதுரை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
பாரம்பரிய விளையாட்டுகள் அழிவின் விளிம்புக்கு சென்று கொண்டிருக்க வீரம் விளைந்த மண்ணில் இது போன்ற போட்டிகள் நடத்துவது பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.