“குடியுரிமை சட்டத் திருத்தம் அவசியமானது!” பாஜகவுக்கு ஆதரவாக ‘வாய்ஸ்’ கொடுத்த ரஜினி!!
குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியமானது தான் என மத்திய பாஜக அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக நடிகர் ரஜினி வாய்ஸ் கொடுத்து மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்றவற்றுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி, தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இஸ்லாமியர்களை குறிவைத்து இந்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டி எதிர்க்கட்சிகளும், மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
இந்நிலையில் குடியுரிமை சட்டத் திருத்தம் உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகள் சரியானதுதான்; அவசியமானது தான் என நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பாக பேட்டியளித்து மீண்டும் ஒரு பரபரப்பை கிளப்பியுள்ளார்.சென்னையில் இன்று ரஜினி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குடியுரிமை சட்டத் திருத்தம் என்பது அவசியமானதுதான். குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்புமில்லை.மதகுருமார்களும் அரசியல்வாதிகளும் தான் சுயநலனுக்காக போராட்டத்தை தூண்டிவிடுகிறார்கள். அரசியல் கட்சிகள் மாணவர்களை போராட்டத்திற்கு பயன்படுத்துகின்றன. இதனால் போராட்டம் நடத்தும் முன் மாணவர்கள் தீர ஆராய வேண்டும்.
இந்த சட்டத்தால் இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் வந்தால் முதல் ஆளாக போராடுவேன். மக்கள் தொகை கணக்கெடுப்பும் அவசியம் நடத்தப்படவேண்டும். கணக்கெடுப்பு நடத்தினால் தான் இந்தியர்கள் யார்? வெளிநாட்டவர்கள் யார்? என்பது தெரியும்.இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக எனக்கு இன்னும் சம்மன் வரவில்லை என்ற ரஜினியிடம் வட்டித் தொழில் செய்கிறீர்களாமே? எனக் கேட்டதற்கு, முறையாக வருமான வரி செலுத்தி வருகிறேன். எந்த சட்டவிரோத தொழிலும் செய்யவில்லை எனக் கூறி படக்கென பேட்டியை முடித்துக் கொண்டார்.
சில தினங்களுக்கு முன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரஜினி, பெரியார் குறித்து தாம் பேசியதற்காக மன்னிப்புக் கேட்க மாட்டேன் என ஓங்கிய குரலில் தெரிவித்து பரபரப்பை கிளப்பினார். இப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாஜக நிலைப்பாட்டுக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்துள்ளதும் பரபரப்பை அதிகரித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




