பத்மஸ்ரீ விருது பெரும் ஆரஞ்சு பழ வியாபாரி யார்? அவர் செய்த சாதனை என்ன?

நடப்பாண்டில் பத்மஸ்ரீ விருது பெற உள்ளவர்களில் கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் ஆரஞ்சு பழ வியாபாரி ஒருவர். பத்மஸ்ரீ விருது பெறும் அளவிற்கு இந்த எளிய மனிதர் செய்த சாதனைதான் என்ன?

 

லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பவர்கள் கூட தானம், தர்மம் செய்ய மனமில்லாத போது ஆரஞ்சு பழம் விற்றே ஏழைக் குழந்தைகளுக்காக ஒரு பள்ளிக்கூடத்தை கட்டியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? கர்நாடகாவை சேர்ந்த ஹஜப்பா தான் அந்த தனி ஒருவர்.

 

மங்களூரில் தெருத்தெருவாக ஆரஞ்சு பழம் விற்பனை செய்து வரும் ஹஜப்பாவிடம் சில ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டு பயணிகள் ஒரு கிலோ ஆரஞ்சு வாங்க வந்தனர். ஆங்கிலம் தெரியாததால் அவர்கள் வாங்காமலேயே சென்றுவிட்டனர். இதனால் வருத்தமடைந்த ஹஜப்பா பள்ளிக்கூடமே இல்லாத தமது சொந்த ஊரில் ஏழை குழந்தைகள் நிலையை நினைத்துப் பார்த்தார்.

அவர்களும் தமிழ் போல் ஆங்கிலம் தெரியாத சூழலில் வளரக் கூடாது என நினைத்தவர் சொந்தமாக பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டார். ஆரஞ்சு பழம் விற்று கிடைத்த சொற்ப பணத்தைக் கொண்டும், கடன் வாங்கியும் தனது கிராமத்தில் உள்ள மசூதி ஒன்றில் 1999ஆம் ஆண்டு ஆரம்ப பள்ளியை தொடங்கினார் ஹஜப்பா.

 

இந்தப் பள்ளியில் முதலில் 28 மாணவர்கள் படித்தனர். பின்னர் நண்பர்கள் உதவியுடன் கிடைத்த நன்கொடையால் இந்த பள்ளி அரசு பள்ளியாக மாறியது. தற்போது ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்கும் உயர்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது.ஹஜப்பா நினைத்ததை போன்று அவரது கிராமத்தில் தற்போது கல்வி கற்றோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

 

இன்றும் ஆரஞ்சு பழங்களை விற்கும் நேரம் தவிர்த்து பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்துவது, மாணவர்கள் குடிக்க தண்ணீர் ஏற்பாடு செய்வது, கல்வி வசதிகளை மேம்படுத்த தொடர்ந்து அதிகாரிகளிடம் பேசுவது என வாழ்க்கையின் பெரும்பாலான நேரத்தை குழந்தைகளின் கல்விக்காக செலவிட்டு வருகிறார் அவர்.

 

அவரது தன்னலம் கருதாது இந்த சேவையை மத்திய அரசு பத்மஸ்ரீ மூலம் அங்கீகரித்துள்ளது. ஏழை குழந்தைகளின் கல்வி கண் திறக்க தனது ஏழ்மை நிலையிலும் பாடுபட்டு வரும் இந்த பல வியாபாரி ஹஜப்பா அனைவருக்கும் முன்னுதாரணம் என்றால் மாற்றுக்கருத்தில்லை.


Leave a Reply