சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல்..! மீண்டும் ஒத்திவைப்பு!!

சிவகங்கை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் இரண்டாவது முறையாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து 16 மாவட்ட கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் திமுக கூட்டணி சார்பில் திமுக 5, காங்கிரஸ் 2, இந்திய ஜனநாயக கட்சி 1 என 8 பேர் தேர்வு பெற்றனர். அதிமுக சார்பில் 8 உறுப்பினர்கள் வெற்றி பெற்ற நிலையில் கடந்த 11-ந் தேதி மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால் போதிய உறுப்பினர்கள் வராததால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில்,இன்று மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் தேர்தல் நடைபெறும் மாவட்ட ஊராட்சி அலுவலகத்திற்கு திமுக கூட்டணி சார்பில் 8 உறுப்பினர்கள் வருகை தந்திருந்தனர். அதிமுக உறுப்பினர்கள் 8 பேரும் வராததால் மொத்தமுள்ள 16 உறுப்பினர்களில் பெரும்பான்மை உறுப்பினர்கள் பங்கேற்காததை காரணம் காட்டி தேர்தல் அலுவலர், தேர்தலை இரண்டாவது முறையாக ஒத்தி வைத்தார்.

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், மக்களுக்கு சேவை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தேர்தலில் கலந்து கொள்ளாதது ஜனநாயக படுகொலை என்றும், திட்டமிட்டு அதிமுகவின் அதிகார துஷ்பிரயோகத்தில் செயல்பட்டு வருவதாகவும், இதற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.


Leave a Reply