இந்தியா vs நியூசிலாந்து டி20 தொடரின் 3-வது போட்டி ஹாமில்டனில் நாளை நடைபெறுகிறது. முதல் இரு போட்டிகளில் வென்றுள்ள இந்தியா, இந்தப் போட்டியிலும் ஹாட்ரிக் வெற்றி பெற்று, நியூசிலாந்து மண்ணில் தொடரை கைப்பற்றிய சாதனை படைக்க, உற்சாகமாக களமிறங்குகிறது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 ஒருநாள் போட்டி தொடர், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என மூன்று வித கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது.
சமீப காலமாக பேட்டிங், பவுலிங்கில் அசத்தி வரும் இந்திய அணி, வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வருகிறது. இந்திய மண்ணில் வங்கதேசம், ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய அணிகளை மண் கவ்வச் செய்த நிலையில், நியூசிலாந்து மண்ணிலும் அசத்தி வருகிறது.
முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் இரு போட்டிகளில் அபார வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் நாளை ஹாமில்டனில் 3-வது போட்டி நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியிலும் வென்றால் தொடரை இந்தியா கைப்பற்றும் .எனவே ஹாட்ரிக் வெற்றியுடன் நியூசிலாந்து மண்ணில் டி20 தொடரையும் கைப்பற்றிய சாதனை படைக்க இந்திய வீரர்கள் உற்சாகமாக களமிறங்க உள்ளனர்.
பேட்டிங்கில் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், கேப்டன் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர் என முன்னணி வீரர்கள் படை உள்ளது. இதில் ரோகித், இரு போட்டிகளிலும் சோபிக்காவிட்டாலும், திடீர் எழுச்சி பெறுவது நிச்சயம். பவுலிங்கில் பும்ரா, ஷமி ஆகியோரை எதிர்கொள்ள முடியாமல் நியூசி வீரர்கள் தத்தளிக்கின்றனர். சுழலில் ஜடேஜா, தக்க சமயத்தில் நல்ல பிரேக் கொடுக்கிறார்.
இதனால் ஹாமில்டன் போட்டியிலும் இந்திய வீரர்கள் சாதிப்பார்கள் என எதிர் பார்க்கலாம். அதே வேளையில், தொடரை இழக்காமல் உயிர்ப்புடன் வைத்திருக்க, இந்தப் போட்டியில் வெல்ல நியூசிலாந்து வீரர்கள் கடுமையாக போராடுவார்கள் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது என எதிர்பார்க்கலாம்.