பிரசித்திபெற்ற வேலூர் கோட்டையில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் வேலூர் கோட்டை பாதுகாப்பற்றதாக இருக்கக் கூடிய இடமாக மாறிவிட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பல வரலாறுகளை படைத்திருக்கும் புகழ்பெற்ற வேலூர் கோட்டையில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 18 ஆம் தேதி அன்று இரவு 9.30 மணி அளவில் இளம் பெண் ஒருவர் தனது காதலருடன் வேலூர் கோட்டையின் ஒரு பகுதியில் பேசிக்கொண்டிருந்தார்.
அங்கு வந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி காதலன் கண்முன்னே அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதையடுத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஏராளமானோர் வந்து செல்லும் சுற்றுலாத்தலமான வேலூர் கோட்டையில் நடந்த இந்த சம்பவம் பாதுகாப்பு குறைபாட்டை காட்டுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நாட்டின் புராதன சின்னமான வேலூர் கோட்டையில் பாதுகாப்புக்காக காவலர்கள் யாரும் இல்லை எனக் கூறும் மக்கள் கோட்டையைச் சுற்றி மின் விளக்குகளை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமாரிடம் கேட்டபோது வேலூர் கோட்டை பகுதியில் ரோந்து பணியை அதிகப்படுத்தி உள்ளதாக கூறியுள்ளார். தொல்லியல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோட்டை முழுவதும் சுமார் 560 மின் விளக்குகள் பொருத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.