திமுக தலைவர் பதவியை மு.க.ஸ்டாலின் விட்டுக் கொடுப்பாரா? துரைமுருகனுக்கு அமைச்சர் ஜெயகுமார் பதிலடி!!
முதல்வர் பதவியை ஓபிஎஸ்சுக்கு எடப்பாடி விட்டுக் கொடுப்பாரா? என துரைமுருகன் எழுப்பிய கேள்விக்கு, திமுக தலைவர் பதவியை மு.க.ஸ்டாலின் உங்களுக்கு விட்டுக் கொடுப்பாரா? என அமைச்சர் ஜெயகுமார் பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் திமுகவினரும் சரி, அதிமுகவினரும் சரி லாவணிக் கச்சேரி பாடுவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. ஒருவர் மீது மற்றவர் ஏதேனும் குற்றச்சாட்டு வைத்தாலோ, புகார் வாசித்தாலோ, கேள்வி எழுப்பினாலோ உன்னைப் பற்றி தெரியாதா? என்ற ரீதியில் ஏட்டிக்குப் போட்டியாக பதிலளிப்பதே வாடிக்கையாகிவிட்டது

சேலத்தில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி, அதிமுகவில் தான் சாதாரண தொண்டனும் முதல்வராக முடியும். ஒரு எடப்பாடி பழனிசாமி அல்ல; ஆயிரம் பழனிசாமிகள் முதல்வராக முடியும் என்ற ஜனநாயக இயக்கம் தான் அதிமுக என கூறியிருந்தார். இதனை கிண்டலடிக்கும் விதமாக, அப்போ ஓபிஎஸ்சுக்கு முதல்வர் பதவியை இபிஎஸ் விட்டுத் தருவாரா? என்று திமுக பொருளாளர் துரைமுருகன் நேற்று ஒரு கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் ஜெயகுமார், அதிமுகவில் சாதாரண தொண்டனும் முதல்வராக முடியும் என்பதற்கு உதாரணம் தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் திமுகவில் அப்படியில்லை. அங்கு வாரிசு அரசியல் தான் நடக்கிறது. திமுக தலைவர் பதவியை துரைமுருகனுக்கு மு.க.ஸ்டாலின் விட்டுக் கொடுப்பாரா? என அமைச்சர் ஜெயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




