குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான கழிவுநீர் கிணற்றின் மீது வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு நபர்கள் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் சென்னையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கிய இளைஞர் அருண்குமார் விஷவாயு தாக்கி உயிரிழந்தார்.
ஏழு மாத குழந்தையை தவிக்கவிட்டு உயிரிழந்த அருண் குமாரின் மரணத்திற்கு வணிக வளாக நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்தது. ஆனால் அம்பத்தூரில் சென்னை குடிநீர் வாரிய கழிவுநீர் அகற்றும் நிலையத்தில் இதேபோன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். கழிவுநீரகற்றும் நிலையத்தில் உள்ள கிணற்றின் மேலே இரும்பு கம்பியால் ஆன மூடி அமைக்க வெல்டிங் செய்து கொண்டிருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை அம்பத்தூர் ரெட்டிபாளையம் ஜஸ்வந்த் நகரில் சென்னை குடிநீர் வாரியத்தின் கழிவுநீர் அகற்றும் நிலையம் உள்ளது. இந்த நிலையில் கழிவு நீர் சேமிக்கப்படும் பெரிய கிணறு ஒன்று உள்ளது. கிணற்றுக்கு இரும்பு கம்பியால் ஆன மூடி போட நிர்வாகம் முடிவெடுத்தது. இந்தப் பணியை ஒப்பந்தத்திற்கு எடுத்த ஒப்பந்ததாரர் ரெட்டேரியில் வசித்துவந்த 23 வயதான பிரகாஷ் மற்றும் பாடியை சேர்ந்த 35 வயதான கண்ணன் ஆகியோரை பணியில் அமர்த்தினார்.
திங்கள் கிழமை அன்று காலையில் கிணற்றின் மீது இரும்பு கம்பியால் ஆன மூடியை வெல்டிங் மூலம் அமைக்கும் பணியை இருவரும் தொடங்கினர். மாலை 5 மணி அளவில் கண்ணன் திடீரென கம்பிகள் இடையே உள்ள இடைவெளி வழியாக கால் நழுவி கிணற்றுக்குள் விழுந்தார்.கழிவுநீர் கிணறு என்பதால் அதில் உள்ள விஷ வாயு தாக்கி சில நொடிகளில் அவர் மயக்கமடைந்தார்.
கண்ணன் கிணற்றில் விழுந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரகாஷ் அவரை மீட்க வேண்டும் என்ற நோக்கத்தில் கழிவுநீர் தொட்டி என்பதை நினைத்துப் பார்க்காமல் தானும் கிணற்றின் உள்ளே குதித்தார். விழுந்த வேகத்தில் அவர் மயக்கமடைந்தார். இருவரும் கிணற்றில் விழுந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்துள்ளனர்.
தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் வந்து இருவரையும் மீட்டு முதலுதவி அளித்து ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்து விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் என்பதும், 10ஆம் வகுப்பு முடித்த இவர் ரெட்டேரியில் தங்கி வெல்டிங் வேலை பார்த்து வந்துள்ளார், என்பதும் தெரியவந்துள்ளது.
கண்ணனைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை. இந்த சம்பவத்தில் இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை ஒப்பந்த பணியாளர்களை எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி கழிவுநீர் கிணற்றில் வேலை செய்ய வைத்தது யார்? அவர்கள் மீது சட்டம் பாயுமா? இருவரது குடும்பங்களுக்கும் இழப்பீடு கிடைக்குமா?