சிஏஏ-வுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் 36 நாட்களாக தொடரும் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் தீவிரம் நாடுமுழுவதும் குறைய தொடங்கியுள்ளன. ஆனாலும் டெல்லியில் கடந்த 35 நாட்களுக்கும் மேலாக இரவு, பகல் பாராமல் சிறிதும் தொய்வின்றி அறவழியில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

ஆனால் ஒப்பீட்டளவில் சி‌ஏ‌ஏ சட்டமாக்கப்பட்ட போது இருந்த எதிர்ப்பின் தீவிரம் தற்போது சற்றே குறைந்து உள்ளது. அதிலும் தொடக்கத்தில் டெல்லியில் போராட்டத்தின் தீவிரம் சற்று அதிகமாகவே இருந்தது. ஜே என்‌யு , ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பு மக்கள் கடுமையாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

 

நாட்கள் செல்ல செல்ல போராட்டத்தின் தீவிரம் குறைந்தது. ஆனால் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள ஷாகின் பாக் என்ற இடத்தில் கடந்த 35 நாட்களுக்கு மேலாக பொதுமக்கள் ஒன்றிணைந்து 24 மணி நேரமும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கிய இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

அன்று, வெறும் 15 பெண்களால் தொடங்கப்பட்ட இந்த போராட்டத்தில் ஆண்கள், மாணவர்கள் என தற்போது நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர் . யாரும் வழி நடத்தாமல் முழுக்க முழுக்க மக்களை ஒருங்கிணைப்பது இந்த போராட்டத்தின் சிறப்பு அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில் இந்தியாவின் ஒருமைப்பாடு, மதச்சார்பின்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாற்றுகின்றனர்.

 

போராட்டக்காரர்களை உற்சாகப்படுத்த பாடல்கள் பாடுவது, கோலம் வரைவது போன்ற சிறுசிறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. கடுமையான குளிரில் வீடுகளில் உள்ள போர்வை உள்ளிட்ட பொருட்களை கொண்டே மக்கள் தங்களை தற்காத்து கொள்கின்றனர். வேலைக்கு சென்றுவிட்டு திரும்பி வரும் ஆண்கள் மாலை நேரங்களில் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொள்கின்றனர்.

 

அந்நேரத்தில் பெண்கள் முடிந்தவரை தங்களது வீடுகளுக்கு சென்று தேவையான உணவுகளை சமைத்து எடுத்துக்கொண்டு மீண்டும் போராட்டத்திற்கு திரும்பி விடுகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாக பாஜக குற்றம்சாட்டிய நிலையில், அதற்கு போராட்டக்காரர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

 

ஒரு புறம் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்க, அவர்கள் அமர்ந்திருக்கும் சாலை டெல்லியின் முக்கிய பகுதிகளை இணைப்பதால் நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் மாற்று வழிகளில் திருப்பி விடப்படுகின்றன. இதனால் அலுவலகங்களுக்கு செல்பவர்கள், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.

 

போராட்டத்தை கைவிடும்படி பல்வேறு தரப்பினர் வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் குடியுரிமை சட்டத் திருத்தம் திரும்பப் பெறப்படும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.


Leave a Reply