எஸ் எஸ் ஐ வில்சன் கொலை வழக்கில் கைதாகியுள்ள மெகபூபாஷா தமிழக இளைஞர்கள் உள்ளிட்ட 17 பேருக்கு பயங்கரவாத பயிற்சி கொடுத்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாரும் எதிர்பாராத ஒரு அதிர்ச்சி சம்பவத்துடனே 2020ஆம் ஆண்டு தொடங்கியுள்ளது தமிழக காவல்துறை.
தமிழகம், கேரளா என இரு மாநில காவல்துறையை பதற வைத்த அந்த கொடூரம் ஜனவரி 8-ம் தேதி இரவு 9 மணி அளவில் நிகழ்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் கண்காணிப்பு பணியில் இருந்த எஸ்எஸ்ஐ வில்சன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்தவர்கள் குமரி மாவட்டத்தை சேர்ந்த தவ்ஃபீக் மற்றும் அப்துல் சமீம் என சந்தேகித்தது காவல்துறை. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய இந்த வழக்கை விசாரிக்க 10 தனிப்படைகளும், தமிழக கியூ பிரிவு அதிகாரிகளும் களமிறங்கினார்.
இதோடு கேரளா மற்றும் கர்நாடகா என மும்மாநில காவல்துறை உதவியுடன் விசாரணை முடுக்கி விடப்பட்ட நிலையில் தவ்பீக் மற்றும் அப்துல் ஷமீம் ஆகியோர் கடந்த 14ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இதனிடையே பெங்களூருவில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஜபிபுல்லா, மன்சூர், அஜ்மத்துல்லா, இஜாஸ் பாஷா ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மெகபூபாஷா குறித்த அதிர்ச்சி தகவல்கள் அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
பெங்களூருவில் வசித்த பாஷா அலுமா அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவர் என கூறப்படுகிறது. பெங்களூருவில் மதராசா நடத்தி வந்த அவர் அங்கு மதக் கல்வி பயில வந்த 17 நபர்களை தேர்வு செய்த மெகபூபாஷா அவர்கள் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக பயங்கரவாத சிந்தனையை வளர்த்து மூளைச்சலவை செய்ததாக கூறுகிறார்கள் தனிப்படை அதிகாரிகள்.
அந்த 17 பேரில் 6 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது மற்றுமொரு அதிர்ச்சி தகவல். சென்னையை சேர்ந்த அப்துல் சமத், தவ்ஃபிக், ஜாஃபர் அலி, கடலூரை சேர்ந்த காஜாமைதீன், கன்னியாகுமரியை சேர்ந்த சையத் அலி நவாஸ், அப்துல் சமீம் உள்ளிட்ட 6 பேர் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த 11 பேர் என மொத்தம் 17 பேர் மெகபூபா ஷாவிடம் பயங்கரவாத பயிற்சி பெற்றிருப்பதாக அடுக்கடுக்கான அதிர்ச்சி தகவலை வெளியிடுகிறார்கள் விசாரணை அதிகாரிகள்.
பல கட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் பெங்களூருவில் பதுங்கியிருந்த மெகபூபாஷா அதிரடியாக கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் கைதானவர்கள் மீது கூட்டு சதி, சதி திட்டம் தீட்டுதல், தேச விரோத செயலில் ஈடுபடுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மெஹபூபாஷாவிடம் பயங்கரவாத பயிற்சி பெற்றதாக கூறப்படும் 17 பேரில் 11 பேரை தமிழக காவல்துறையின் பிடியில் சிக்கியுள்ள நிலையில், எஞ்சிய ஆறு பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகங்கள் எழுப்பும் கேள்விகள் ஒருபுறம், அந்த கேள்விகளுக்கு விடைகள் கண்டறிய விசாரணை மறுபுறம் என வேகத்தை கூட்டி இருக்கிறது தமிழக காவல்துறை.