“முரசொலி” வைத்திருந்தால் என்ன பொருள்..? “ரஜினி”க்கு ஆயிரம் அர்த்தம் கற்பித்த முரசொலி தலையங்கம்!!

ஒருவர் ‘முரசொலி’ வைத்திருந்தால் அவர் ‘திமுக’காரர்… ‘துக்ளக்’ வைத்திருப்பவர் ‘அறிவாளி’.. என்று ரஜினி திருவாய் மலர்ந்தாலும் மலர்ந்தார்; இப்போது வம்பாக மாட்டி பலரின் கேலிக்கும்,கிண்டலுக்கும், கடும் விமர்சனத்திற்கும் ஆளாகி படாத பாடுபடுகிறார். திமுகவின் நாளேடான முரசொலி தலையங்கத்தில், முரசொலி வைத்திருந்தால் அவன் ‘தமிழன்’, ‘மனிதன்’ என ஆயிரம் பொருள்படும்படி அர்த்தம் கற்பித்து ரஜினிக்கு ‘சாட்டையடி’யாக பதிலடி கொடுத்துள்ளது.

 

கடந்த 4 தினங்களுக்கு முன் சென்னையில் துக்ளக் இதழின் 50-வது ஆண்டு விழா நடைபெற்றது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்த விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினி உதிர்த்த தத்துவங்களில் ஒன்று தான், “முரசொலி வைத்திருந்தால் அவர் திமுக காரர்; துக்ளக் வைத்திருந்தால் அவர் அறிவாளி” என்ற தத்துவ வரிகள். சினிமா வசனம் போல் ரஜினி உதிர்த்த இந்த தத்துவ வரிகளுக்கு இப்போது பலரும் அவரை கழுவி, கழுவி ஊற்றுகிறார்கள். இதனை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்களின் தற்போதைய ஆஸ்தான கதாநாயகனே ரஜினிதான். அந்த அளவுக்கு சமூக வலைதளங்களில் கேலி, கிண்டலாக, நையாண்டியாக பரவிக்கிடக்கிறது ரஜினியின் இந்த தத்துவத்திற்கான பதிலடி கமெண்டுகள்.

 

முரசொலியை திமுக கட்சிக்குள் முடக்கிவிட்டு, துக்ளக் படிப்பவன், வைத்திருப்பவன் அறிவாளி என புகழ் பாடிய ரஜினிக்கு முரசொலியில் சுடச்சுட உடனடி பதிலடி கிடைக்கும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் 4 நாட்கள் பொறுமைக்குப் பின் இன்று, முரசொலி வைத்திருந்தால் என்னென்ன பொருள் தெரியுமா? என ரஜினிக்கு உறைக்கும் வகையில் ஆயிரம் அர்த்தங்களை கற்பித்து தலையங்கமே தீட்டியுள்ளது. முரசொலி தலையங்கத்தின் வாசகங்கள் இதுதான் :

முரசொலி வைத்து இருந்தால் தமிழன் என்று பொருள். அதுவும் திராவிட இயக்க தமிழன் என்று பொருள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற பேதமற்ற உன்னத கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவன் என்று பொருள். எல்லோருக்கும் எல்லாம் என்ற சமத்துவ எண்ணம் கொண்டவன் என்று பொருள்.

 

கல்தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடியின் இன்றைய குடிமக்கள் என்று பொருள். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள், மெய்ப்பொருள் காண்பவன் என்று பொருள். ஒடுக்கப்பட்ட முரசொலி வைத்திருந்தால் ஒடுக்கப்பட்ட சமூகத்தவன் என்று பொருள்.தன்னை ஒடுக்கியவர் யார் என்று உணரத் தொடங்கி விட்ட வன் என்று பொருள். இனியும் ஒருங்க மறுப்பவன் என்று பொருள். ஒடுக்கியவர் திமிர் ஒடுங்க ஒன்று சேர்ப்பவன் என்று பொருள்.

 

எத்தனை மிக, மிக என்றும் போட்டுக் கொள்ளுங்கள் என்று பொருள். மிக மிக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபடுபவன் என்று பொருள். தான் யாருக்கும் அடிமை இல்லை, எனக்கும் யாரும் அடிமை இல்லை என்பவன் என்று பொருள்.

 

முரசொலி வைத்திருந்தால் வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்பவன் என்று பொருள். பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்குபவன் என்று பொருள். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பவன் என்று பொருள்.

 

முரசொலி வைத்திருந்தால் தமிழ் காப்போன் எனப்பொருள்.தமிழர் நலன் காப்போன் என்று பொருள் .தமிழ்நாடு காப்பவன் என்று பொருள்.வாழ்ந்த இனம் வீழ்ந்ததன் வரலாறும் வீழ்ந்த இனம் மீண்டும் வாழ சரியான பாதையை தேர்ந்து விட்டவன் என்றும் பொருள்.

 

யார் எதிரி? யார் நண்பன்? என்பதை உணர்ந்து விட்டவன் என்று பொருள். எதிரிகளோடு எச்சூழலிலும் சமரசம் செய்து கொள்ளாள தவன் என பொருள்.

 

முரசொலி வைத்திருந்தால் ஆண்டான், அடிமைக்கு எதிரானவன் என பொருள். சாதி சதியை எதிர்ப்பவன், மத மாச்சர்யங்களை வெறுத்தவன் என்று பொருள். சாதி பேதம் பார்க்காதவன் என்று பொருள்.

 

முரசொலி வைத்திருந்தால் ஒரு பொன்னுலகு உருவாக்கும் போராட்டத்தில் தன் பெயரை இணைத்துவிட்ட உடன் பிறப்பு என பொருள். முரசொலியை நீங்கள் வைத்திருந்தால் மனிதன் என்ற பொருள் என அடுக்கடுக்காக அர்த்தங்களை கூறி ரஜினிக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது முரசொலி.


Leave a Reply