காங்கிரஸ்-திமுக கூட்டணி இடையே ஏற்பட்ட விரிசலை ஒட்ட வைக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, காங்.முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி., உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மு.க.ஸ்டாலினை சமரசப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கையாக வெளியிட்டது பூதாகரமாகிவிட்டது. கூட்டணி தர்மத்துக்கு புறம்பாக திமுக செயல்படுவதாக அவர் விடுத்த அறிக்கை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ரொம்பவே வருத்தமடையச் செய்து விட்டது.
இந்த வருத்தத்தை, கோபத்தை வெளிப்படையாக வெளிப்படுத்தாத ஸ்டாலின், டெல்லியில் சோனியா தலைமையில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை நாசூக்காக புறக்கணிப்பு செய்து வெளிப்படச் செய்தார்.
அதைத் தொடர்ந்து கூட்டணி தொடர்பாக திமுக மூத்த தலைவர்களான டி.ஆர்.பாலு, துரைமுருகன் போன்றோர் உதிர்த்த வார்த்தைகள் காங்கிரசாரை கொந்தளிக்கச் செய்து விட்டது.கே.எஸ்.அழகிரியின் அறிக்கை மு.க.ஸ்டாலினை வருத்தமடையச் செய்து விட்டது.
எந்தப் பிரச்னை என்றாலும் அறிக்கை விட்டது தவறு; மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கூறியிருக்கலாம். அதனால் தான் சோனியா கூட்டத்தை புறக்கணித்தோம். இனி காங். உடன் கூட்டணி தொடருமா? என்பதை காலம் தான் சொல்லும் என டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
அதே நாளில் துரைமுருகனோ, கூட்டணியை காங்கிரஸ் போனால் போகட்டும்; எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. ஓட்டே இல்லாத காங்கிரஸ் கட்சி வெளியேறினால் எந்த நட்டமும் இல்லை என்று ஒரேயடியாக காங்கிரசை மட்டம் தட்டி பேசினார்.
இதற்கு பதிலடி தருவது போல் காங்கிரஸ் தரப்பில் எம்.பி.க்கள் கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூர், ஜெயக்குமார் மற்றும் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் போன்ற குட்டித் தலைவர்கள் திமுகவுக்கு எதிராகவும், துரைமுருகனுக்கு வார்த்தைகளை சூடாக வெளிப்படுத்தினர்.
அதுவும் முந்தைய காலங்களில் காங்கிரசின் தயவால் திமுக எப்படியெல்லாம் குளிர் காய்ந்தது என்பதை, 2006-ல் மைனாரிட்டி திமுக அரசுக்கு முட்டுக் கொடுத்தது, கனிமொழிக்கு ராஜ்யசபா எம்.பி.பதவி கொடுத்தது, காங்கிரஸ் தயவால் துரைமுருகன் அமைச்சரானது, அவரது மகன் வேலூர் தேர்தலில் நின்ற போது காங். தயவை நாடியது போன்றவற்றை இவர்கள் பட்டியலிட்டனர்.
இப்படி காங்கிரஸ் தரப்பில் வரிசை கட்டி, அதுவும் குட்டித் தலைகள் பதிலடி கொடுப்பார்கள் என்பதை திமுக தரப்பில் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இதனால் இனியும் காங்கிரசை சீண்ட வேண்டாம். இன்னும் பொறுமை காப்போம். காங்கிரஸ் தரப்பு விரும்பினால் தானாக கூட்டணியை விட்டுப் போகட்டும். நாமாக வெளியேற்றியதாக இருக்கக் கூடாது.
காங்கிரஸ் மேலிடத்தின் ரியாக்ஷன் என்ன என்று தெரியும் வரை பொறுமை தேவை என்ற ரீதியில் கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் கட்டளையே போட்டதாக தெரிகிறது.
இதனாலேயே, காங்கிரசாரின் தாக்குதலால் கொந்தளிப்பில் இருந்த திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களும் அமைதி காத்தனர்.காங்கிரஸ் மூத்த தலைவர்களும், கார்த்தி, மாணிக்கம் தாகூர் போன்றோர் கூறிய கருத்துக்களை ரசிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
தற்போதைய சூழலில் கூட்டணி முறிவதை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் விரும்பவில்லைதான். இதனையே திமுக தலைமைக்கும் நடுநிலையான சில தமிழக புள்ளிகள் எடுத்துக் கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து நடந்ததை மறப்போம்; மன்னிப்போம் என்ற ரீதியில் கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசலை ஒட்டுப் போடும் முயற்சிகள் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தரப்பில் விறுவிறுப்படைந்துள்ளன.
அதன் ஒரு கட்டமாகவே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் இன்று நண்பகல் சந்திக்கப் போவதாக செய்திகள் காலை முதலே பரவின. ஆனால் திமுக தரப்பில் இந்தச் சந்திப்பில் ஆர்வம் காட்டவில்லை என்றும், ஸ்டாலினின் கோபம் இன்னும் தீரவில்லை என்பது போல் தகவல் கசிய, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சமாதானப் படலத்தில் குதித்தனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான திருநாவுக்கரசர் இன்று அவசரமாக செய்தியாளர்களை சந்தித்தார். காங்., – திமுக கூட்டணி உடையவும் இல்லை; உடையப் போவதும் இல்லை. கூட்டணி எப்போதும் போல் தொடர்கிறது .
இரு தரப்பிலும் பேசியதை அனைவரும் மறப்பது நல்லது என்று சமாதானம் கூறினார். தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் அறிவாலயத்திற்கு நேரில் வந்து மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.
பின்னர்கூட்டணியின் தலைவர் என்ற முறையில் ஸ்டாலினுக்கு பொங்கல் வாழ்த்து கூற வந்ததாக தெரிவித்த நாராயணசாமி, தமிழகத்திலும், புதுச்சேரியிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி எப்போதும் போல் தொடர்வதாக கூறி விட்டுச் சென்றார்.
இதனால் திமுக – காங்கிரஸ் இடையேயான விரிசலை ஒட்டுப்போடும் பணிகள் இப்போது விறுவிறுப்படைந்துள்ளதாகவே தெரிகிறது.விரி சல் சரியாகுமா? விரிவடையுமா? என்பது கே.எஸ்.அழகிரி – மு.க.சந்திப்பின் போது தெரிந்துவிடும்.