ராஜ்கோட்டில் நடைபெற்ற 2-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பையில் நடந்த முதல் போட்டியில் தோற்றதற்கு பழி வாங்கிய இந்தியாrajkot தொடரையும் 1-1 என சமன் செய்துள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. மும்பையில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில், இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது. இதனால் இன்று நடைபெற்ற 2-வது போட்டியில் கட்டாய வெற்றி வேண்டிய இக்கட்டான சூழலில் இந்தியா களமிறங்கியது.
டாஸ் வென்ற ஆஸி., கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் இம்முறை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்த ஜோடி அதிரடியாக ஆடி 13.3 ஓவரில் 81 ரன் குவித்த போது ரோகித் (42 ரன்கள்) அவுட்டானார். அடுத்து வந்த கோஹ்லி, தவானுடன் ஜோடி சேர இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
அதிரடியாக ஆடி 96 ரன்கள் சேர்த்திருந்த தவான், ஜாம்பா பந்தை பவுண்டரி விளாச நினைத்து, தேவையில்லாமல் பந்தை தூக்கி அடிக்க அது கேட்காசிவிட்டது. இதனால் சதம் வாய்ப்பை இழந்து தவான் பரிதாபமாக வெளியேறினார். அடுத்து வந்த ஸ்ரேயா ஸ் ஐயர் பந்துகளை வீணடித்து 17 பந்தில் 7 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.
பின்னர் கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்த லோகேஷ் ராகுல் அதிரடியை தொடர இந்திய அணியின் ரன் வேகம் மீண்டும் எகிறத் தொடங்கியது. அரை சதம் கடந்து 78 ரன்கள் எடுத்திருந்த கோஹ்லியும், ஜாம்பாவின் பந்தை சிக்சருக்கு தூக்கி அடிக்க, பவுண்டரி எல்லையில் லாவகமாக ஸ்டார்க் தாவிப் பிடித்து அவுட்டாக்கினார்.
பின்னர் வந்த மனீஷ் பாண்டே 2 ரன்களில் வெளியேறினார். மறு முனையில் சிக்சர், பவுண்டரிகளாக விளாசிய லோகேஷ் ராகுல், 80 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி ஓவரில் ரன் அவுட் ஆனார். 50 ஓவர் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் எடுத்தது.
வெற்றிக்கு 341 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸி., அணியின் ஓபனர்களான வார்னர், ஆரோன் பிஞ்ச் ஜோடிக்கு, வேகத்தில் பும் ராவும், ஷமியும் தொல்லை கொடுத்தனர். முதலாவது போட்டியில் இந்த ஜோடி இருவரும் சதம் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல், வெற்றி தேடித் தந்தவர்கள் ஆவர். ஆனால் இம்முறை வார்னர் 15 ரன்களிலும், பிஞ்ச் 33 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஆஸி., அணியின் அனுபவ வீரர் ஸ்மித்தும், இளம் வீரர்
லபுசோனும் ஆஸி., அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இந்த ஜோடி 94 ரன்கள் சேர்த்த நிலையில் 46 ரன்கள் எடுத்திருந்த ல புசோனை அவுட்டாக் கினார் ஜடேஜா. அடுத்த சிறிது நேரத்தில் 98 ரன்கள் எடுத்திருந்த ஸ்மித்தை சதம் எடுக்க விடாமல் குல்தீப் யாதவ் அவுட்டாக்கினார்.
அடுத்து கேரே (18), ஸ்டார்க் (0) ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் குல்தீப் வெளியேற்ற ஆஸி அணியின் தோல்வி உறுதியானது. கடைசியில் 49.1 ஓவரில் 304 ரன்களுக்கு ஆல் அவுட்டாளது. இதனால் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மும்பையில் பெற்ற தோல்விக்கு ஆஸி.அணியை பழி தீர்த்து தொடரையும் 1-1 என சமன் செய்தது இந்தியா.
இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி போட்டி பெங்களுருவில நாளை மறுதினம் நடக்கிறது. இந்தப் போட்டியில் வெல்லும் அணிக்கு கோப்பை என்பதால் இரு அணிகளுமே பலப்பரீட்சை நடத்துவது உறுதி.