காணும் பொங்கல் : சென்னை மெரினாவில் கட்டுக்கடங்காத கூட்டம்!!

காணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு சுற்றுலா இடங்களில் குடும்பத்துடன் ஏராளமானோர் குவிந்தனர்.சென்னையில் மெரினா முதல் மகாபலிபுரம் வரை கடற்கரை பகுதிகளில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்.

 

தைப்பொங்கல், மாட்டுப் பொங்கலை வீடுகளில் கொண்டாடும் தமிழக மக்கள், அடுத்து வரும் காணும் பொங்கல் நாளில், குடும்பத்துடனும், உற்றார், உறவினர்களுடனும் ஓரிடத்தில் ஒன்று கூடி உற்சாகமாக பொழுதை கழிப்பது வழக்கம்.

 

அதிலும் சென்னையைச் சுற்றியுள்ள மக்கள் இதனை ஒரு திருவிழா போலவே கொண்டாடுவர். இதற்காக இன்று காலையிலேயே உணவு, திண்பண்டங்கள், நொறுக்குத் தீனிகளுடன் சென்னையைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்களுக்கு படையெடுத்தனர்.

 

குறிப்பாக சென்னை மெரினா கடற்கரை முதல் பெசன்ட் பீச், கோவளம், மகாபலிபுரம் வரை கடற்கரையோரம் உள்ள பகுதிகளில் ஏராளமானோர் திரண்டனர். மெரினா கடற்கரையில் கடலே தெரியாத அளவுக்கு கட்டுங்கடங்காத கூட்டம் திரண்டது.

காலை முதலே கடற்கரையில் கும்பல் கும்பலாக அமர்ந்து, தங்கள் வீட்டு சிறுவர், சிறுமிகளுடன் விளையாடி பொழுது போக்கினர். கட்டுங்கடங்காத கூட்டம் திரண்டதனால் பாதுகாப்பு பணியில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

 

இது போல், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் காணும் பொங்கலை அருகில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு சென்று உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதனால் அனைத்து சுற்றுலா இடங்களிலும் இன்று கூட்டம் அலைமோதியதை காண முடிந்தது.


Leave a Reply