“திமுக-காங்., கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை”! சோனியாவை சந்தித்த பின் கே.எஸ்.அழகிரி சமாளிப்பு!!

திமுகவும்,காங்கிரசும் இணைந்த கரங்கள் ; இரு கட்சிகள் இடையேயான உறவில் எந்த சலசலப்பும் இல்லை என தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து, தற்போது எழுந்துள்ள உரசலை சரி செய்யப் பார்த்துள்ளார்.

 

உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் எழுந்த மனக்கசப்பை, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கையாக வெளியிட்டது இரு கட்சிகளிடையேயான உறவில் சிக்கலை ஏற்படுத்தும் நிலை உருவாகி விட்டது. கூட்டணி தர்மத்துக்கு புறம்பாக திமுக நடந்து கொண்டது என கே.எஸ்.அழகிரி கூறியது திமுகவை ரொம்பவே காயப்படுத்திவிட்டது.

 

இதனால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் நேற்று கூட்டியிருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை திடீரென புறக்கணித்து, திமுக தனது எதிர்ப்பை வேறு விதமாகக் காட்டியது. கே.எஸ்.அழகிரியின் அறிக்கை தான், திமுக புறக்கணிப்புக்கு காரணம் என்பதையும் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு பகிரங்கமாகவே தெரிவித்து விட்டார்.

இந்நிலையில், மேலிடத்தின் அழைப்பின் பேரில் டெல்லி சென்றிருந்த கே.எஸ்.அழகிரி, இன்று காலை சோனியா காந்தியை சந்தித்தார். அப்போது திமுகவுக்கு எதிராக அறிக்கை கொடுத்தது குறித்து தன்னிலை விளக்கம் கொடுத்ததாகவும், தமிழக காங்கிரஸ் மற்றும் அரசியல் நிலவரம் குறித்து எடுத்துரைத்ததாகவும் தெரிகிறது.

 

சோனியாகாந்தி உடனான சந்திப்புக்குப் பின், செய்தியாளர்களை கே.எஸ்.அழகிரி சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
திமுகவும், காங்கிரசும் இணைந்த கரங்கள்; பிரிய வாய்ப்பு இல்லை. திமுக கூட்டணியில் சலசலப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவித்து, இரு கட்சிகளிடையே தற்போது எழுந்துள்ள உரசலை சரி செய்ய முயன்றுள்ளார். திமுக சமாதானமாகுமா?கூட்டணி விஷயத்தில் முரண்டு பிடிக்குமா? என்பது தெரியத்தான் போகிறது.


Leave a Reply