ராமநாதபுரத்தில் நடந்த மாநில அளவிலான ஓ என்ஜிசி காவிரி கோப்பைக்கான 6 ஆம் ஆண்டு போட்டியில் மகளிர் பிரிவில் கடலூர், ஆடவர் பிரிவில் திருவாரூர் அணிகள் கோப்பை வென்றன. ராமநாதபுரம் மாவட்ட வாலிபால் சங்கம், ஓஎன்ஜிசி இணைந்து தந்தை பெரியார் ஓஎன்ஜிசி காவிரி கோப்பைக்கான 6 ஆம் ஆண்டு மாநில அளவிலான போட்டி ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஜன.10, 11, 12 தேதிகளில் நடந்தது.
இதில் அரியலூர், கடலூர், காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகபட்டினம் அணிகள் பங்கேற்றன. மகளிர் பிரிவு இறுதி ஆட்டத்தில் 27: 25, 18:25, 25:22 என்ற செட் கணக்கில் ராமநாதபுரம் அணியை, கடலூர் அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. அரியலூர், புதுக்கோட்டை அணிகள் 3, 4 ம் இடம் பிடித்தன. ஆடவர் பிரிவு இறுதி ஆட்டத்தில் திருவாரூர் அணி புதுக்கோட்டை அணியை வென்றது. ராமநாதபுரம், கடலூர் அணிகள் 3, 4 ம் இடம் பிடித்தன.
பரிசளிப்பு விழாவிற்கு டாக்டர் அரவிந்தராஜ் தலைமை வகித்தார். போட்டியில் வென்ற அணிகளுக்கு , ராமநாதபுரம் வாலிபால் சங்கத் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி ரொக்கப்பரிசு மற்றும் கோப்பை வழங்கினார். செயலர் சோமசுந்தரம், பொருளாளர் யூசுப் கனி, இணை செயலர்கள் ரமேஷ் பாபு, தமிழரசு, ராமநாதபுரம் மாவட்ட உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க செயலர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.