தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது..? பட்டியலில் தாமும் இருப்பதாக நடிகர் எஸ்.வி.சேகர் தகவல்!!

காலியாக உள்ள தமிழக பாஜக தலைவர் பதவிக்கு புதிய தலைவர் யார்? எப்போது நியமனம்? என்பது கேள்வியாக இருக்கும் நிலையில், பட்டியலில் தமது பெயரும் உள்ளதாக நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழக பாஜக தலைவராக பதவி வகித்த தமிழிசை, திறம்பட செயல்பட்டார் என்றே கூறலாம். பாஜகவுக்கு எதிரான அல்லது தமக்கு எதிரான விமர்சனங்கள் எதுவானாலும் சரி உடனுக்குடன் பதிலடி கொடுத்து கட்சியை வளர்க்க அரும்பாடுபட்டார் என்பதை விட நன்கு சமாளித்தார் என்றே கூறலாம். அது மட்டுமின்றி தமிழிசையின் சமாளிப்பு கருத்துக்களில் பல சமூக வலைதளங்களில் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும் நல்ல தீனி போட்டதும் நிஜம்.

தமிழிசையின் உழைப்புக்கு பரிசாக தெலுங்கானா மாநில ஆளுநராக புரமோசன் கொடுத்தது பாஜக மேலிடம் . இதனால் கடந்த ஐந்து மாதங்களாக தமிழக பாஜக தலைவர் பதவி காலியாகவே உள்ளது. இந்தப் பதவியைப் பிடிக்க தமிழக பாஜக பெருந்தலைகள் முதல் துடிப்பு மிக்க இரண்டாம் கட்டத் தலைவர்களும் முட்டி மோதுவதே தாமதத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.

 

மூத்த தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி. ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, குப்புராம், கருப்பு முருகானந்தம் முதல் அடுத்த கட்ட தலைவர்களான வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், கோவை முருகானந்தம், கே.டி. ராகவன் என பலரும் தமிழக பாஜக தலைவர் பதவியை குறிவைத்து காய் நகர்த்தி வருகின்றனர். இதனால் யாரை பதவியில் அமர்த்துவது என்பதில் டெல்லி மேலிடமும் பலத்த யோசனையில் உள்ளதாகக் கூறப்பட்டாலும், இன்னும் ஒரு சில நாட்களில் நியமன அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 

இதற்கிடையே நடிகர் எஸ்.வி.சேகரும் தலைவர் பதவிக்கு முயற்சி செய்து வருகிறாராம். இது குறித்து திருக்கடையூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சேகர், தமிழக பாஜக தலைவர்களுக்கான பட்டியலில் தமது பெயரும் இடம் பெற்று என்றும், தம்மை நியமித்தால் சிறப்பாக செயல்பட முடியும் என்று கூறியுள்ளார்.


Leave a Reply