குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தை திமுக திடீரென கடைசி நேரத்தில் புறக்கணித்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் திமுகவுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை மீதான கோபத்தை வெளிப்படுத்தவே திமுக இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இந்தச் சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு பாஜக கூட்டணியில் இல்லாத அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் சோனியா அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் மே.வங்க முதல்வர்
மம்தா, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர், டெல்லி மாயாவதி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துவிட்டன.
காங்கிரசின் புதிய கூட்டாளியான சிவசேனாவும், தங்களுக்கு அழைப்பு வரவில்லை எனக் கூறி கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா தலைமையில் கூட்டம் தொடங்கி வெகு நேரம் ஆகியும் திமுக தரப்பில் இந்தக் கூட்டத்தில் யாரும் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாக பரபரப்பு தொற்றிக் கொண்டது.
காங்கிரஸ் மேலிடத்துடனும், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருடனும் இணக்கமாகவே செல்லும் திமுக, முக்கியமான இந்தக் கூட்டத்தை புறக்கணித்தது ஏன்? என்ற கேள்விகள் றெக்கை கட்டி பறக்க ஆரம்பித்தது.
பொதுவாக டெல்லியில் நடக்கும் இது போன்ற கூட்டங்களில் மு.க. பங்கேற்கத் தவறியதில்லை. அவர் பங்கேற்காவிட்டால், திமுக சார்பில் கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா போன்ற முக்கியத் தலைவர்கள் பங்கேற்பார்கள்.
இதனால் இன்றைய கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்காத நிலையில், இன்று டி.ஆர்.பாலு டெல்லியில் தான் முகாமிட்டிருந்தார். இதனால் டி.ஆர்.பாலு இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பார் என்றே நினைத்திருந்தனர்.
ஆனால் அனைத்துக் கட்சி கூட்டம் முடியும் வரை திமுக சார்பில் டி.ஆர்.பாலுவோ வேறு யாருமோ கூட்டத்தில் பங்கேற்கவில்லை. டி.ஆர்.பாலுவோ, டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகம் சென்று விட்டார் என்ற தகவல் வெளியானது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின் போது அதிமுக தரப்பில் 89 கோடி ரூபாய் பிடிபட்டது தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவே அவர் சென்றுள்ளதாக கூறப்பட்டது.
இதனால்,திமுக சார்பில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது அல்லது புறக்கணிப்பது என எந்த முடிவும் முன்கூட்டி தெரிவிக்கப்படாத நிலையில் திடீரென திமுக புறக்கணித்தது காங்கிரசுக்கும் மற்ற எதிர்க்கட்சிகளுக்கும் அதிர்ச்சியாகிவிட்டது. கடைசியில் திமுகவின் இந்த திடீர் புறக்கணிப்புக்கு காரணம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சமீபத்தில் விடுத்த அறிக்கை தானாம்.
உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில், கூட்டணி தர்மத்துக்கு புறம்பாக திமுக செயல்படுகிறது என கே.எஸ்.அழகிரி விடுத்த அறிக்கையால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகவும் வேதனை அடைந்தாலும் அதை வெளிப்படுத்தாமலும், பதிலும் தராமல் கடந்து 3 நாட்களாக அமைதி காத்து வந்தார். தக்க சமயத்தில் இன்று இந்தக் கூட்டத்தை புறக்கணித்து தனது அதிருப்தியை காட்டி விட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், திமுகவை சமாதானப்படுத்தும் வகையில், கே.எஸ்.அழகிரியின் பதவி கூட பறி போகும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே.கே.எஸ்.அழகிரியும் டெல்லியில் தான் முகாமிட்டுள்ள நிலையில், நாளை சோனியாவையும் சந்திக்க உள்ளார். இதனால் நாளை தமிழக காங்கிரஸ் விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை பாய்ந்தாலும் ஆச்சர்யமில்லை என்றே கூறப்படுகிறது.