பயங்கரவாதிகளை டெல்லிக்கு அழைத்து வர உதவியதாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கைதாகியுள்ளார். குடியரசு தினம் நெருங்கி வரும் நிலையில் பயங்கரவாதிகளுக்கு காவல்துறை அதிகாரி ஒருவரே உதவி செய்ய முன்வந்திருப்பது பாதுகாப்பு விவகாரத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள சோபியான் பகுதியில் இருந்து கடந்த சனிக்கிழமையன்று இரு பயங்கரவாதிகள் ஜம்மு நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருப்பதாக மாவட்ட எஸ்பிக்கு உளவுத்துறை தகவல் அளித்தது. அதன் அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கை அமைத்து காவல்துறையினர் சோதனை நடத்தி வந்தனர்.
அப்போது ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமான கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றி வரும் தாவேந்தர் சிங் ஒரு வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அவரது வாகனத்தையும் காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில், இரு பயங்கரவாதிகள் பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
இந்த சூழலில் சில ஆண்டுகளுக்கு முன் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட தாக்குதலிலும் கைதான டிஎஸ்பி தாவேந்தர் சிங்கிற்கு தொடர்பு இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகின. இதனை மறுத்துள்ள காஷ்மீர் ஐஜி விஜயகுமார் நாடாளுமன்ற தாக்குதலுக்கும், டிஎஸ்பிக்கும் தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. எனினும் இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என கூறினார்.
வாகனத் தணிக்கையில் பிடிபட்ட பயங்கரவாதிகளில் ஒருவரது பெயர் நவீத் என்பதும் அவர் காவல் துறையில் காவலராக பணியாற்றி, பின்னர் 2017 ஆம் ஆண்டு ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பில் இணைந்தவர் என்ற தகவல் தெரியவந்திருப்பதாக கூறியிருக்கிறார் காஷ்மீர் ஐஜி விஜயகுமார். தவிர கைதான நவீத் காஷ்மீரில் நடந்த பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் தொடர்புடையவர் என்றும் குறிப்பாக காவல்துறையினர் மற்றும் பொதுமக்களுக்கு எதிராக நடந்த தாக்குதலை முன்னின்று நடத்திய முக்கிய பயங்கரவாதி என்ற அதிர்ச்சி தகவல் அளித்துள்ளார். விஜயகுமார்.
இதனால் ஜம்மு காஷ்மீர் காவல் துறையில் பயங்கரவாதிகளுக்கு உதவ பல அதிகாரிகள் இருக்கின்றனவா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இதனை மறுத்துள்ளார் விஜயகுமார், ஓரிரு அதிகாரிகள் செய்யும் தவறை வைத்து ஒட்டுமொத்த காவல்துறையையும் சந்தேகக் கண்ணோட்டத்துடன் காண வேண்டாம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையே கைதான டிஎஸ்பி வீட்டில் இருந்து சில முக்கிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதால் பயங்கரவாதிகள் டெல்லிக்கு வர அவர் உதவினாரா? எதற்காக பயங்கரவாதிகளை காரில் அழைத்து சென்றார் ? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.