சென்னை புத்தகக் கண்காட்சியில், அதிமுக அரசின் ஊழல் குறித்த புத்தகங்களுடன் ஸ்டால் அமைத்திருந்த மூத்த பத்திரிகையாளர் அன்பழகனை கைது செய்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்களும், பத்திரிகையாளர் சங்கங்களும் குரல் கொடுத்துள்ளன.
சென்னை ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த புத்தக கண்காட்சியில், மூத்த பத்திரிகையாளரும், சென்னை பத்திரிகையாளர் மன்ற பொருளாளரும், மக்கள் செய்தி மையத்தின் ஆசிரியருமானஅன்பழகனும், தாம் வெளியிட்ட புத்தகங்களின் தொகுப்புகளுடன் ஒரு ஸ்டால் போட்டிருந்தார்.அன்பழகனின் புத்தகங்களில் பெரும்பாலானவை தமிழக அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் ஊழல்கள் குறித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அதிகாலை நேரத்தில் அன்பழகனை, சைதாப்பேட்டையில் உள்ள அவருடைய வீட்டில் கைது செய்ததோடு, புத்தகக் கண்காட்சியில் அவருடைய ஸ்டாலுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் வகையில் மூத்த பத்திரிகையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டதற்கு தமிழக அரசியல் தலைவர்களும், பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் எனவும் குரல் கொடுத்துள்ளனர்.
இது குறித்து திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தமது டிவிட்டர் பதிவில், சென்னை புத்தகக் கண்காட்சியில் அதிமுக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தும் புத்தகம் இருந்ததால், மக்கள் செய்தி மையம் அரங்கின் அனுமதியை ரத்து செய்து, பத்திரிகையாளர் அன்பழகனை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. அவரை உடனே விடுதலை செய்து, புத்தகக் கண்காட்சிக்கு உரிய அனுமதியும் திரும்பவும் தரப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் அன்பழகன் கைதுக்கு கண்டனம் தெரிவித்து சாடியுள்ளார். மூத்த பத்திரிகையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.சென்னை புத்தகக் கண்காட்சியில் அவருக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்ட புத்தகங்களில் ஆளும் கட்சிக்கு எதிரான கருத்துகளுடன் புத்தகங்கள் இருந்ததுதான் இந்த கைதுக்கான பின்னணி என சொல்லப்படுவது மிக்க வேதனை. கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் இது போன்ற செயல்களை தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.அன்பழகனை உடனே விடுதலை செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவும் அன்பழகன் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளர்.அன்பழகன் | அம்பலப்படுத்தியுள்ள ஊழல்களை ஆதாரங்களுடன் மறுக்க திராணியில்லாமல் அவரை கைது செய்திருப்பது கருத்துச் சுதந்திரத்தை பறித்து ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயலாகும் என கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது போல் பத்திரிகையாளர் அன்பழகன் கைதுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சென்னை பத்திரிகையாளர் மன்றம் உள்ளிட்ட பல்வேறு செய்தியாளர்கள் சங்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளன.

அதிகாலை நேரத்தில் கைது செய்யப்பட்ட அன்பழகன் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அன்பழகனை வரும் 24-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி மீது அடுக்கடுக்காக ஊழல் புகார்களை சுமத்தியதற்காக அன்பழகன் கைது செய்யப்பட்டு, அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. இது தொடர்பான வழக்கும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.






