ஆடு மேய்த்தவர் முதலிடம் பிடித்தது எப்படி..? டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடா..? 35 பேரிடம் நேரில் விசாரணை!!

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வில், ராமநாதபுரம் மாவட்டத்தில் இரு மையங்களில் மட்டும் தேர்வெழுதியவர்களில் பெரும்பாலானோர் தேர்வானது எப்படி? ஆடு மேய்த்தவர் முதலிடம் பெற்றது எப்படி? முறைகேடு நடைபெற்றதா? என்பது குறித்த விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த மையங்களில் தேர்வெழுதி மாநில அளவில் முதல் 100 இடங்களில் 35 இடங்களைப் பிடித்தவர்களை சென்னைக்கு வரவழைத்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

 

தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு, டிஎன்பிஎஸ்சி சார்பில், கடந்த செப்டம்பர் 1-ந் தேதி குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 9 ஆயிரம் காலியிடங்கான இத்தேர்வில் 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 பேர் பங்கேற்றனர். மாநிலம் முழுவதும் 5575 மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வு முடிவுகளும் வெகு சீக்கிரமாக 72 நாளில் கடந்த நவம்பர் 12-ந் தேதி வெளியானது.

இந்த தேர்வு முடிவுகள் வெளியானவுடன் தேர்ச்சி பெற்றோர் பட்டியலைப் பார்த்த பிற தேர்வர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இரு மையங்களில் மட்டும் தேர்வெழுதியவர்களில் 3214 பேர் தேர்ச்சி பெற்றிருந்ததுதான் இந்த அதிர்ச்சிக்கு காரணம். அது மட்டுமல்ல, ரேங்க் பட்டியலில் மாநில அளவில் முதல் 100 இடங்களில் இங்கு தேர்வு எழுதியவர்களில் 35 பேர் இடம் பிடித்தனர். இதற்கெல்லாம் மேலாக மாநில அளவில் முதலிடம் பிடித்தவரும் இங்கு தேர்வெழுதியவர் தான். அந்த முதலிடம் பெற்ற புண்ணியவான் யாரென்று பார்த்தால் படித்து பட்டம் பெற்றுவிட்டு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த திருவராஜூ என்பவர் தான். மேலும் அவர் 7 முறை டிஎன்பிஎஸ்சி தேர்வில் பங்கேற்று 7 முறையும் தோல்வி கண்ட 38 வயதுக்காரர் . அதே மாதிரி இந்த தேர்வு மையங்களில் தேர்வெழுதி சமூக இட ஒதுக்கீட்டில் வெற்றி பெற்றவர்களும் ஏராளம். இன்னும் சொல்லப்போனால் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் முக்காலே அரைக்கால் வீசம் என்பார்களே அது போல 90 சதவீதம் பேர் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அப்புறமென்ன? சந்தேகம் வலுக்கவே, ஏதோ சம்திங் ராங் நடந்துள்ளது என டிஎன்பிஎஸ்சிக்கு புகார்கள் குவிந்தன.

 

அப்போதுதான் டிஎன்பிஎஸ்சிக்கும் உறைத்தது போலும். 2 மாதங்களாக தீர அலசி ஆராய்ந்த டிஎன்பிஎஸ்சியும் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு உள்ளது என்ற முடிவுக்கும் வந்தது. இதனால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் தலைமையிலான குழுவினர் ராமநாதபுரம் வந்து நேரில் விசாரணையை தொடங்கினர்.

 

குருப் 4 தேர்வுக்கான வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த மாவட்ட கருவூலத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார். தேர்வுக்கு முன்பே வினாத்தாள் வெளியானதா? என்பது குறித்தும் விசாரித்தார். பின்னர் தேர்வு நடந்த ராமேஸ்வரம் தனியார் பள்ளி மற்றும் கீழக்கரை தனியார் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்ட நந்தகுமார், தேர்வு கண்காணிப்பில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து மாநில அளவில் முதலிடம் பிடித்த ஆடு மேய்க்கும் பட்டதாரி திருவராஜ் உள்ளிட்ட தேர்வில் ரேங்க் பெற்ற சிலரிடம் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையில் முறைகேடு நடந்திருப்பதற்கான சந்தேகம் வலுத்தது.

இதையடுத்து, இந்த இரு மையங்களில் தேர்வெழுதி மாநில அளவில் முதல்100 ரேங்க் பட்டியலில் இடம் பிடித்த 35 பேரையும் சென்னைக்கு வந்து டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. இதனால் இன்று ஆஜராகியுள்ள இவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட இந்த இரு மையங்களை தேர்வு செய்ததிலேயே,இந்த தேர்வில் முறைகேடு நடந்துள்ளது அப்பட்டமாகவே தெரிகிறது. இதன் பின்னணியில் ஏதோ ஒரு பயிற்சி நிறுவனத்தின் கைங்கர்யம் இருந்திருக்கலாம் என்றும் மாவட்ட அரசு உயர் அதிகாரிகள் முதல் தேர்வு கண்காணிப்பில் ஈடுபட்டவர்கள்,தேர்வு நடந்த பள்ளி, கல்லூரி நிர்வாகம் வரை மிகப் பெரும் நெட்வொர்க்கில் இந்த மோசடி அரங்கேறியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இனவ எல்லாம் இன்றைய விசாரணையில் அம்பலமாகும் பட்சத்தில் செப்டம்பரில் நடந்த குருப் 4 தேர்வே ரத்தாகவும் வாய்ப்புள்ளது. அது மட்டுமின்றி பெரும் நெட்வொர்க் மூலம் முறைகேட்டில் ஈடுபட்ட பல கருப்பு ஆடுகளும் வசமாக சிக்குவார்கள் என்றும் தெரிகிறது.


Leave a Reply