கிரிக்கெட்டில் மிரட்டும் 4 வயது சிறுவன்!

நான்கு வயதே நிரம்பிய சென்னையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆசியன் புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பிடித்துள்ளார். வெறித்தனமான ரசிகராக மட்டும் இல்லாமல் களத்தில் இறங்கி சாதனை படைக்கும் எதிர்கால கிரிக்கெட் நட்சத்திரம் என்ற நம்பிக்கைக்கும் சொந்தக்காரராக மாறியுள்ளார்.

 

பென்சிலை படிக்கவேண்டிய பிஞ்சு விரல்கள் கிரிக்கெட் மட்டையை பிடித்துக்கொண்டு பந்துகளை நாலாபுறமும் விளாசுகிறது. வெறும் நான்கு வயது மட்டுமே நிரம்பிய இந்த பாலகன் தான் சானு சூரிய தேவ். சென்னை அண்ணாநகரை சேர்ந்த இந்த சிறுவனின் அசாத்திய திறமை பார்வையாளர்களை மிரள வைக்கிறது. சிறுவயதிலேயே கிரிக்கெட் மட்டையை சுழற்றும் இந்த சிறுவன் ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பிடித்து சாதனை படைத்தார்.

 

இதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை நேரில் சந்தித்து வாழ்த்து மழையில் நனைந்திருக்கிறார் சூரிய தேவ். சூரிய தேவ் கிரிக்கெட் விளையாடும் காட்சிகளை கண்ட மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ நேரில் அழைத்து பாராட்டி கௌரவித்து உள்ளார்.

 

மத்திய அமைச்சரை சந்தித்த பின் சென்னை திரும்பிய சூரிய தேவ் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே தனது கனவு என மழலை மொழியில் பேசியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. குழந்தைகளின் திறமைக்கு மதிப்பளித்து அதனை மெருகூட்ட வேண்டியது பெற்றோரின் கடமை எனக் கூறியே சூரியதேவன் தாயார் சுபத்ரா முறையான பயிற்சியை வழங்கி சூரிய தேவ்வை இந்திய அணியில் இடம் பெற வைப்பதே தங்கள் லட்சியம் எனவும் தெரிவித்துள்ளார்.

 

4 வயதிலேயே கிரிக்கெட் மட்டையை சுழற்றி பந்துகளை எகிற வைக்கும் இந்த சிறுவனுக்கு முறையான பயிற்சி வழங்கினால் ஜொலிக்கும் நட்சத்திரமாக மாறுவான் என்பது பலரின் நம்பிக்கையாக உள்ளது.


Leave a Reply