விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் பாதுகாப்பு பணிக்காக வந்த துணை காவல் கண்காணிப்பாளரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லையா என கேள்வி எழுப்பும் வகையில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் நிகழ்ந்துள்ளது.
14 ஒன்றியங்களை கொண்ட நரிக்குடி ஊராட்சியில் அதிமுக ஐந்து இடங்களையும், திமுக 6 இடங்களையும், சுயேட்சை 2 இடத்தையும், அமமுக ஒரு இடத்தையும் கைப்பற்றின. மறைமுக தேர்தலில் வெற்றி பெறுவதற்கு சுயச்சை மற்றும் அமமுகவின் ஆதரவை பெற இரு கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது.
இதனிடையே நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர், துணை தலைவரை தேர்வு செய்ய மறைமுகத் தேர்தல் நடந்து கொண்டிருந்தது. அப்போது அடையாளம் தெரியாத நான்கு பேர் சுவர் ஏறி குதித்து ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்குள் புகுந்தனர். அவர்களின் கைகளில் பட்டாக்கத்தி, அரிவாள் ஆயுதங்கள் இருந்தன. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பத்திரிகையாளர்கள் அவர்களை செல்போனில் படம் பிடிக்க முயன்றனர்.
அப்போது ஆத்திரமடைந்த அந்த ரவுடிகள் கற்களை வீசி கண்மூடித்தனமாக தாக்கத் தொடங்கினர். திடீர் தாக்குதலால் அப்பகுதி முழுவதும் பதற்றமானது. அப்போது அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் பாதுகாப்பு பணியில் இருந்தார். வன்முறையில் ஈடுபட்ட 4 பேரும் அலுவலக அறையை நோக்கி ஆக்ரோஷமாக முன்னேறினார்.

அவர்களை தடுத்து நிறுத்த முற்பட்டபோது காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசனுக்கும், ரவுடிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. அதில் வெங்கடேசனின் வலது முழங்கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. ரத்தம் சொட்ட சொட்ட அவர் வெளியே ஓடிவந்த காட்சி அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால் சற்றும் பதறாத டிஎஸ்பி வெங்கடேசன் கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து அதில் தோட்டாக்களை நிரப்பியது பதற்றத்தை அதிகரிக்க செய்தது.
அடுத்தது என்ன நடக்கப்போகிறது என களமே பரபரப்பான சூழலில் துப்பாக்கியை கண்ட ரவுடிகள் சிதறி ஓடி விட்டனர். அவர்களை விரட்டிச் சென்ற காவல்துறையினர் அதில் இரண்டு பேரை மட்டும் கைது செய்தனர். அவர்கள் கமுதியை சேர்ந்த பாலா, வீரசோழன் பகுதியை சேர்ந்த குமார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இருவரும் அதிமுக ஆதரவாளர்கள் என காவல்துறை கூறியுள்ள நிலையில் அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.






