சுட்டுக் கொல்லப்பட்ட எஸ்.ஐ.வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி..! முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட மார்த்தாண்டம் காவல் சிறப்பு உதவியாளர் வில்சன் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

 

தமிழக – கேரள எல்லையில் உள்ள களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சன், காரில் வந்த இரு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். தமிழகத்தையே உலுக்கியுள்ள இந்த சம்பவத்தில் பயங்கரவாத இயக்கத்தினருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. சிசிடிவி காட்சிகள் மூலம் இந்தக் கொலையில் ஈடுபட்டது அப்தும் சமீம், தவ்பீக் என்ற இரு இளைஞர்கள் என்பதும், இவர்கள் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதும் தெரிய வந்தது.

 

இதனால் தமிழக டிஜிபி திரிபாதி நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் கேரள போலீஸ் டிஜிபியுடனும் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த சையது இப்ராஹிம், அப்பாஸ் என்ற 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் எஸ்.ஐ. வில்சனை சுட்டுக்கொன்ற தவ்பிக், முகமது சமீம் ஆகியோரின் கூட்டாளிகள் என்று கூறப்படுகிறது.

 

இந்நிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட எஸ்.ஐ.வில்சன் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். இந்த கொலை தொடர்பாக நேற்று சட்டப் பேரவையில் பேசிய முதல்வர், சுட்டுக் கொல்லப்பட்ட எஸ்.ஐ.வில்சன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அறிவிப்பும் வெளியிட்டிருந்தார்.


Leave a Reply