டோல்கேட்களில் வடமாநில ஊழியர்களின் அடாவடி..! ஐயப்ப பக்தர்களை துரத்தி, துரத்தி தாக்கிய கொடுமை!!

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான டோல்கேட்களில், பணிபுரிபவர்களில் பெரும்பாலானோர் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். தமிழ் தெரியாத இவர்களால், டோல்கேட்களில் தினமும் தகராறுகள் வெடிப்பது சகஜமாகி விட்டது.மதுரை அருகே ஒரு டோல்கேட்டில் வாகனத்தில் வந்த ஐயப்ப பக்தர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்களை விரட்டி, விரட்டி கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழகத்தில், நான்கு வழிச்சாலைகளில் 40 கி.மீட்டருக்கு ஒரு டோல்கேட் அமைத்து சுங்கக் கட்டணம் என்ற பெயரில் வாகன ஓட்டிகளிடம் அடாவடி வசூல் நடத்தப்படுகிறது.இந்த டோல்கேட்களை ஒட்டுமொத்தமாக காண்ட்ராக்ட் எடுத்திருப்பது வட மாநில புள்ளிகள் தான். இவர்கள், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் ஒரு மூத்த அமைச்சருக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால், இந்த டோல்கேட்களில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள ஊழியர்களில் பெரும்பாலானோரும் வட மாநிலத்தவர்கள் தான். வட மாநில இளைஞர்களை வேலைக்கு அழைத்து வந்து,10, 15 பேரை ஒரே வீட்டில் தங்க வைத்து, ரேசன் அரிசி சாப்பாடு போட்டு இவர்களை கொத்தடிமைகள் போல் வேலை வாங்குகின்றனர் டோல்கேட் நிர்வாகிகள். பெரும்பாலும் அடாவடி,அடிதடிக் காகவே இந்த ஊழியர்களை வேலைக்கு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

மொழி தெரியாத ஊரில், பணிக்கு வந்துள்ள இந்த இளைஞர்கள், டோல்கேட்டுகளில் செய்யும் அடாவடிகள் கொஞ்ச நஞ்சமல்ல. இதற்கு பெரும்பாலும் மொழிப் பிரச்னை தான் பிரதான காரணமாக உள்ளது. வாகனங்களில் வருவோர், டோல்கேட்டில் கட்டணம் செலுத்துவது தொடர்பாக சந்தேகமோ, கூடுதல் கட்டணம் குறித்து வாக்குவாதம் செய்தாலோ கூட, என்ன ? எது? என்று கேட்காமல் இந்த வட மாநில இளைஞர்கள் ரவுடிகள் போல் அடிதடியில் இறங்கி விடுகின்றனர். அதுவும் டோல்கேட் கட்டண விலக்கு சலுகை பெற்றுள்ள உள்ளுர்வாசிகளிடமும், பாஸ் வைத்துள்ள முக்கியப் பிரமுகர்களிடமும் இவர்கள் காட்டும் கெடுபிடி பகீர் ரகம்தான். என்ன சொன்னாலும், காசு பிடுங்குவதிலேயே குறியாக உள்ளனர்.

இதில் மதுரை – விருதுநகர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கப்பலூர் டோல்கேட்டில் தினமும் அடிதடி, தகராறு, போலீஸ் பஞ்சாயத்து என்பது வாடிக்கையாகிவிட்டது. இங்கு விவரமாக கவுண்டர்களில் வசூல் செய்யும் பணியில் மட்டும் ஓரிரு தமிழ் ஆட்களை நியமித்துள்ளனர். மற்றபடி மீதி எல்லாருமே வட மாநிலத்து இளைஞர்கள் தான். இவர்கள் கையில் பெரிய தடிகளுடன் தான் டோல்கேட் பகுதி முழுவதையும் ஆக்கிரமித்து வாகனங்களை கண்காணிக்கின்றனர். கட்டணம் செலுத்தாமலோ, ஏதேனும் காரணம் கூறி நகர முயன்றாலோ அவ்வளவுதான்.

 

வண்டியை கம்புகளால் அடித்து சேதப்படுத்தி விடுகின்றனர். இதை தட்டிக் கேட்டால் வாகனத்தின் உள்ளே இருப்பவர்களையும் ரத்தம் வர சேதப்படுத்தி விடுகின்றனர். இதில் பாஸ்ட் டேக் விவகாரத்தால் இப்போது கூடுதலாகவே தகராறு நடக்க ஆரம்பித்து விட்டது.

 

இதில், நேற்று மாலை குழுவாக வந்த சென்னை ஐயப்ப பக்தர்கள், இந்த டோல்கேட்டில் அடி, உதைக்கு ஆளாகி படாது பட்டபாடும், அதைத் தொடர்ந்து சந்தித்த சோதனைகளும் தான் பகீர் ரகம். சென்னையை அடுத்த செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள், தரிசனம் முடிந்து நான்கைந்து வேன்களில் மதுரை நோக்கி வந்தனர்.

 

இதில் ஒரு வாகனத்தை கப்பலூர் டோல்கேட்டில் தெரியாத்தனமாக பாஸ்ட்டேக் தடத்தில் டிரைவர் ஓட்டிச் சென்று விட்டார். அப்போது, பாஸ்ட் டேக் இல்லாமல் ஏன் இந்தத் தடத்தில் வந்தாய்? என்று மிரட்டல் விடுத்து, அபராதமாக இரு மடங்கு கட்டணம் கேட்டு ஊழியர்கள் கெடுபிடி செய்துள்ளனர். ஊழியர்கள் இந்தியில் மிரட்ட, அங்கிருந்த தமிழ் தெரிந்த ஊழியரிடம் கூடுதல் கட்டணம் கேட்பது என்ன நியாயம்? என ஐயப்ப பக்தர்கள் முறையிட்டு வாக்குவாதம் செய்துள்ளனர்.

வாக்குவாதம் சிறிது நேரம் நீடிக்க, பின் வந்த வாகனங்கள் வரிசை கட்டி நின்று விட்டன. உடனே வட மாநில ஊழியர்கள் இந்தியில் திட்டியபடியே, ஐயப்ப பக்தர்களை முரட்டுத்தனமாக தாக்கத் தொடங்கி விட்டனர். பக்தர்களில் சிலரும் பதிலுக்கு தாக்க ரணகளமாகி விட்டது. ஒட்டு மொத்தமாக சேர்ந்த டோல்கேட் ஊழியர்கள், வேனில் இருந்த ஐயப்ப பக்தர்களை சரமாரியாக தாக்க, அவர்கள் உயிர் பயத்தில் கீழிறங்கி ஓடினர். ஆனாலும் விடாமல் ஊழியர்கள் துரத்தி, துரத்தி கம்புகளால் தாக்கியதில் ஐயப்ப பக்தர்கள் சிலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் டோல்கேட் பகுதியே களேபரமாகி விட்டது.

 

தகவல் அறிந்து வந்த போலீசாரும், ஐயப்ப பக்தர்களிடம் தான் கெடுபிடி காட்டினர்.அனைவரையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்ல போலீசார் முயல, ஐயப்ப பக்தர்களோ, ஐயா சாமீ நாங்க ஊருக்கு போகணும், கேஸ் ஒண்ணும் வேணாம். ஆளை விட்டாப் போதும் எனக் கெஞ்சிக் கூத்தாடி, ஒரு வழியாக புறப்பட்டுச் சென்றனர். இதே டோல்கேட்டில் தான் சில மாதங்களுக்கு முன்பு காரில் வந்த ரவுடிகள் சிலரிடம் இந்த வடமாநில ஊழியர்கள் வம்பிழுக்க, அந்த ரவுடிகள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நடைபெற்று பெரும் பரபரப்பான து குறிப்பிடத்தக்கது.

 

டோல்கேட்டுகளில் அடிக்கடி மோதல் சம்பவம் நடைபெறுவதற்கு முக்கியக் காரணமே வடமாநில ஊழியர்களும், மொழிப் பிரச்சினையும் தான். இதனால் தமிழ் தெரிந்த ஊழியர்களை பணியமர்த்தினால் பிரச்சனை வராது என்பதே வாகன ஓட்டிகளின் கருத்தாக உள்ளது.


Leave a Reply