ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் என்பதிலிருந்து 6 மணி நேரமாக வேலை நேரத்தை குறைத்து அறிவித்துள்ளது பின்லாந்து அரசு. இனி வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும்தான் வேலை. அதுவும் ஒரு நாளுக்கு ஆறு மணி நேரம் மட்டும் வேலை பார்த்தால் போதும். கேட்கும்போதே காதில் இன்பத்தேன் வந்து பாய்கிறது.
இந்த மகிழ்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ள அவர் பின்லாந்து பிரதமர் சன்னா மெரின். 34 வயது நிரம்பிய சன்னா மெரின் உலகின் மிக இளம் பிரதமராவார். அவரது அமைச்சரவையில் உள்ள 19 பேரில் 12 பேர் பெண்கள். அதிலும் நிதி அமைச்சருக்கு 32 வயது தான். அத்துடன் பதவி ஏற்றது முதல் பல அதிரடிகளை அரங்கேற்றி வருகிறது அவரது அரசு.
இந்த வரிசையில் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே இனி வேலை நாட்களாக இருக்க வேண்டும் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் சன்னா மெரின். தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும் நேசிப்பவர்களுக்கு அதிக நேரம் ஒதுக்கி கலை நிகழ்ச்சி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களில் கவனம் செலுத்தினால் மக்களின் வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் அந்த நம்பிக்கை தமக்கு உள்ளதாக கூறுகிறார் சன்னா மெரின்.
இதன் காரணமாகவே தொழிலாளர்களின் வேலை நேரத்தை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதற்காக பரிசோதனை முயற்சிகளுக்கான காலத்தை ஏற்பாடு செய்யுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார். பின்லாந்தில் தற்போது 5 நாட்கள் 8 மணி நேர வேலை என்பது விதிமுறை. ஆனால் 8 மணி நேரம் வேலை செய்தும் அங்கு உற்பத்தி அதிகரிக்கவில்லை.
அதேநேரம் அண்டை நாடான சுவீடனில் கடந்த சில ஆண்டுகளாக சீரான அளவில் உற்பத்தி அதிகரித்து வருகிறது. காரணம் ஸ்வீடனில் ஒருநாளுக்கு ஆறுமணி நேரம் மட்டுமே வேலை. இந்தக் கோட்பாட்டை அவர்கள் நீண்ட நாட்களாக பின்பற்றி வருகின்றனர். இதனால் ஊழியர்கள் மன உளைச்சல் இல்லாமல் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், உற்பத்தியும் அதிகரித்துள்ளதாகவும் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இதன் விளைவாக ஸ்வீடன் நாட்டின் வரி வருவாயில் அதிகரித்தது.
இந்த நடைமுறை பிரபல கார் நிறுவனமான டோயோட்டாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின் அங்கு பணிபுரிந்த பணியாளர்கள் சந்தோஷமாகவும், அதே சமயத்தில் அதிக உற்பத்தியும் கொடுப்பதை டொயோட்டா நிறுவனம் கண்டறிந்தது. இப்படி ஏராளமான சாதகமான விஷயங்கள் இருப்பதால் தன்னுடைய நாட்டு மக்களுக்கும் இந்த மாற்றத்தை கொண்டு வர விரும்புகிறார்.