கோவையில் புகழ் வாய்ந்த நாகசாயி மந்திர் என அழைக்கப்படும் சாய்பாபா கோவிலில் 77 வது தரிசன விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோவை சாய்பாபா காலனி பகுதியில் பல்வேறு சிறப்புகளை கொண்ட சாய்பாபா திருக்கோவில் அமைந்துள்ளது.சாய்பாபா பாதுகை விழா,நூற்றாண்டு விழா என பல்வேறு விழாக்களை கோவிலின் ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை நிர்வாகத்தினர் திறம்பட செய்து வருகின்றனர்.இந்நிலையில் இக்கோயிலின் வரலாற்று சிறப்பு மிக்க 77 வது தரிசன விழா சாய்பாபா கோவில் வளாகத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவையொட்டி அதிகாலை காகட ஆரத்தி துவங்கி ஹோமம்,பூர்ணாஹுதி,மற்றும் நாகசாயி பஜன் நடைபெற்றது. தரிசன விழாவின் சிறப்பு குறித்து கோவில் துணைத்தலைவர் பாலசுப்ரமணியன் மற்றும் செயலாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் பேசுகையில்,கடந்த 1943 ஆம் ஆண்டு கோவிலில் சாய்பஜனை நடைபெற்று கொண்டிருக்கும் போது,சத்குரு ஸ்ரீ சாய்பாபா படத்திற்கு முன்பு தோன்றிய நாகரூபம் சுமார் பதினேழரை மணி நேரம் அங்கேயே இருந்து பக்தர்களுக்கு காட்சி தந்ததோடு,பஜனை பாடல்களுக்கு ஏற்ற படி அசைந்து ஆடி பக்தர்களை பரவசமடைய செய்தது. இந்த நிகழ்ச்சி முதல் இந்த ஆலயம் நாகசாயி எனும் சிறப்பை பெற்றதால்,இந்த தரிசன விழாவை தொடர்ந்து நடத்தி வருவதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து பேசுகையில் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவிற்கான திருப்பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். இந்த சந்திப்பின் போது அறங்காவலர் சுகுமார் உடனிருந்தார்.