நிறுத்திவைக்கப்பட்ட ஊராட்சிகளில் நாளை வாக்கு எண்ணிக்கை

சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நிறுத்திவைக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது.

 

சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியத்தின் வெல்லகள்பட்டி மற்றும் நவப்பட்டி ஆகிய இரண்டு ஊராட்சிகளில் வாக்காளர் பட்டியலில் வேட்பாளர்களின் பெயர் இல்லாததால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்குச்சீட்டுகள் மட்டும் தனியே பிரிக்கப்பட்டு கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

 

மாநிலத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி இவை நாளை பலத்த பாதுகாப்புடன் எடுத்துவரப்பட்டு எண்ணப்படவுள்ளன. இதேபோல திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியத்தில் இரண்டாம் மங்கலம், பெருநமல்லூர் ஆகிய ஊராட்சிகளிலும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

 

நாளை காலை 9.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு முடிவுகள் நாளைக்கு அறிவிக்கப்பட்டு சான்றிதழும் வழங்கப்படும். வெற்றி பெறுபவர்கள் 11ஆம் தேதி நடைபெறும் மறைமுக தேர்தலில் பங்கேற்கலாம்.


Leave a Reply