இந்தியா – இலங்கை இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதல் போட்டி கவுகாத்தியில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த ஆண்டு அக்டோபரில் டி-20 உலகக் கோப்பை நடைபெற உள்ள நிலையில், கடந்த ஆண்டைப் போல 2020-லும் இந்தியாவின் வெற்றி தொடருமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, சமீப காலமாக டெஸ்ட், ஒரு நாள் , டி20 என மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது.
இந்தாண்டு அக்டோபரில் டி-20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில் டி20 போட்டிகளிலும் இந்திய அணி சாதித்து வருகிறது. இந்தாண்டில் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக 15 போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது.
கடந்தாண்டில் இந்தியா வந்த வங்கதேசம், மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற டி-20 போட்டி தொடரை இந்தியா அபாரமாக வென்ற நிலையில், இந்த புத்தாண்டில், இலங்கை அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடுகிறது .
இதன் முதல் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இன்றைய போட்டியில் துணை கேப்டன் ரோகித் சர்மா, வேகப் புயல் முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு தரப்பட்டுள்ள நிலையில், காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ஷிகர் தவான்,பும்ரா ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பின் களமிறங்குகின்றனர்.
அனுபவ வீரரான மலிங்கா தலைமையிலான இலங்கை அணியும் பலம் வாய்ந்த அணியாகவே கருதப்படுகிறது. சமீபத்தில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் 3-0 என அபாரமாக வீழ்த்தி தொடரை கைப்பற்றிய உற்சாகத்தில் இலங்கை உள்ளது. இதனால் இன்றைய போட்டியில், இந்தியாவுக்கும் கடும் சவால் விட இலங்கை தயாராகவே உள்ளது என்று கூறலாம்.
இதுவரை இரு அணிகளும் மொத்தம் 16 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 11போட்டிகளிலும், இலங்கை 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.