உள்ளாட்சித் தேர்தல்: வெற்றி பெற்றவர்கள் நாளை பதவியேற்பு..! மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்களுக்கு “மவுசோ மவுசு”!!

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் நாளை பதவியேற்கின்றனர். மாவட்ட ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கு வரும் 11-ந் தேதி மறைமுகத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், கவுன்சிலர்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. பல இடங்களில் பேரமும் ஜரூராக தொடங்கி விட்டது.

 

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற்று, முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் வெற்றி பெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அனைவரும் நாளை பதவியேற்க உள்ளனர். ஊராட்சித்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அந்தந்த ஊராட்சி அலுவலகங்களிலும், ஒன்றிய கவுன்சிலர்கள் சம்பந்தப்பட்ட ஒன்றிய அலுவலகத்திலும், மாவட்ட கவுன்சில் அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களும் நாளை காலை 10 மணிக்கு பதவியேற்கின்றனர்.

 

இதைத் தொடர்ந்து வரும் 11-ந் தேதி மாவட்ட கவுன்சில் தலைவர், ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர், ஊராட்சி துணைத் தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மறைமுகத் தேர்தலில் வார்டு உறுப்பினர்களின் பங்களிப்பு தான் முக்கியமானது. பெரும்பான்மை வார்டு உறுப்பினர்களின் ஆதரவு பெற்றால் வெற்றி நிச்சயம். இதனால் வார்டு உறுப்பினர்களின் மவுசு இப்போது அதிகரித்து விட்டது.

இதில் மாவட்ட, ஒன்றிய கவுன்சிலுக்கு கட்சி அடிப்படையில் தேர்வு நடைபெற்றது.இதில் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவியது.இதில் திமுக கூடுதல் இடங்களைப் பிடித்திருந்தாலும், மாவட்ட ஊராட்சியைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 27-ல் திமுகவும், அதிமுகவும் தலா 13 மாவட்டங்களில் பெரும்பான்மை பெற்றுள்ளன.

 

இதனால் அந்தக் கட்சிகளின் தலைமை முடிவு செய்பவர்களே தலைவர், துணைத் தலைவராக முடியும். என்றாலும் கவுன்சிலர்களின் ஆதரவைக் காட்டி பலரும் முட்டி மோதுவதால், இரு கட்சி மேலிடங்களுக்கும் தலைவலி தான் .மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவியை குறிவைத்துள்ளோர்,

 

 இப்போதே தங்கள் கட்சிகளின் கவுன்சிலர்களை சுற்றி வளைத்து, சிலரை அன்பாக கடத்திச் சென்று கவனிப்பும் நடத்தத் தொடங்கி விட்டனர். இதில் சிவகங்கை மாவட்ட ஊராட்சியில் மட்டுமே பெரும் இழுபறி ஏற்பட வாய்ப்புள்ளது. மொத்தமுள்ள 16 வார்டுகளில் திமுக கூட்டணியும், அதிமுக கூட்டணியும் தலா 8 இடங்களில் வென்றுள்ளதால், எந்தக் கட்சி கவுன்சிலர் மாற்றுக் கட்சிக்கு தாவுவாரோ என்ற நிலை உருவாகியுள்ளது.

 

ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கான போட்டியில் தான் பல இடங்களில் இரு கட்சிகளிடையே ஏக இழுபறி உள்ளது. இதனால் இரு கட்சிகளின் கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள், சுயேட்சையாக வெற்றி பெற்றோருக்கு கூடுதல், மவுசு ஏற்பட்டுள்ளது.

 

ஊராட்சி ஒன்றியங்களைப் பொறுத்த வரையிலும் கூட, மொத்தமுள்ள 314 ஒன்றியங்களில் திமுகவும் அதிமுகவும் தலா 135 தலைவர் பதவி இடங்களைப் பிடிக்கும் வகையில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து மெஜாரிட்டியாக வெற்றி பெற்றுள்ளன. இரு யூனியன்களில் தலைவர், துணைத் தலைவர் பதவியை கைப்பற்றும் அளவுக்கு அமமுக மெஜாரிட்டி பெற்றுள்ளது.

 

இது போக மீதமுள்ள 42 ஒன்றியங்களில் இரு கட்சிகளுக்கும் மெஜாரிட்டி இல்லை. அமமுக மற்றும் . சுயேட்சைகள் பலரும் வெற்றி பெற்றி பெற்றுள்ளதால், அவர்களின் தயவு கிட்டினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதால், இவர்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.

 

இதனால், இவர்களை இப்போதே பேரங்கள் ஜரூராக ஆரம்பத்துள்ளன. மேலும் சொந்தக் கட்சி மற்றும் கூட்டணி கவுன்சிலர்கள் அணி மாறி விடுவார்களோ? என்ற பீதியும் ஒரு பக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிமுக, திமுக கவுன்சிலர்களை சிலர் அன்பாக கடத்திச் சென்று, பத்திரமாக தங்க வைத்து உற்சாகமாக கவனித்து வருவதாலும், கவுன்சிலர்கள் பலரின் காட்டில் கவனிப்பு மழை பெய்கிறது என்றே கூறலாம்.


Leave a Reply