ரஜினியின் தர்பார் படத்தை தமிழில் வெளியிட கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் திட்டமிட்டபடி கர்நாடகாவில் தர்பார் படம் திரைக்கு வருவதில் சிக்கல் எழுந்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள தர்பார் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வரும் 9-ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
தர்பார் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி, ரஜினி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே தர்பார் திரைப்படத்தை வெளியிட தடை கோரி, மலேசிய நிறுவனம் ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. தற்போது தர்பார் படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம், இதற்கு முன்னர் தயாரித்த 2.0 படத்திற்கு வாங்கிய கடனை வட்டியுடன் செலுத்தாவிட்டால், தர்பார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வர உள்ளது.
இந்நிலையில், தர்பார் திரைப்படத்தை கர்நாடகாவில் தமிழில் திரையிடக்கூடாது என்றும், கன்னட மொழியில் டப் செய்து வெளியிட்டால் மட்டுமே6 திரையிட அனுமதிப்போம் என கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கர்நாடகாவில் பெரும்பாலான தமிழர்கள் வசிப்பதால், ரஜினியின் பெரும்பாலான படங்கள் தமிழிலேயே வெளியாவது வழக்கம். தற்போதும் தர்பார் படமும் தமிழில் வெளியாகும் நிலையில், கன்னட அமைப்புகளின் திடீர் போர்க்கொடியால் திட்டமிட்டபடி படம் தமிழில் வெளியாகுமா? அல்லது கன்னட மொழியில் டப் செய்த பின் தாமதமாக வெளியிடப்படுமா? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.