சாதியை காரணம் காட்டி திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளனர் காதலர்கள். விருதுநகர் அருகே உள்ள வில்லிபத்திரி கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பாலசுப்பிரமணியன்.
இவரது மகன் 23 வயதான சரவணகுமார். இவரும் ரோசல்பட்டி கிராமத்தை சேர்ந்த ரஞ்சிதா என்ற இளம்பெண்ணும் விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. கல்லூரிப் படிப்பு முடிந்த நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்துள்ளனர்.
ஆனால் இவர்களது காதலுக்கு ஜாதி தடையாக வந்துள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு தரப்பு பெற்றோரும் இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருவரும் தங்களது பெற்றோரை சமாதானப்படுத்தி திருமணத்திற்கு சம்மதம் வாங்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் இந்த விவகாரத்தில் பெற்றோர் தங்கள் முடிவில் உறுதியாக இருந்துள்ளனர்.
ஒருகட்டத்தில் சோர்ந்து போன இந்த ஜோடி பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டாலும் வாழ விட மாட்டார்கள் என அச்சமடைந்துள்ளனர். எனவே வாழ்க்கையில் இணைய சாத்தியமில்லாததால் இறப்பில் ஒன்று சேர முடிவு செய்துள்ளனர். விருதுநகர் சாத்தூர் ரயில் பாதை பகுதிக்கு சென்ற சரவணகுமாரும், ரஞ்சிதாவும் அங்கே அமர்ந்து பேசியுள்ளனர்.
பின்னர் இருவரும் அந்த வழியாக வந்த ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தகவலறிந்து சென்ற போலீசார் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரின் உடல்களையும் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.