இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 315 மையங்களில் இன்று நடைபெறுகிறது. தலா ஒவ்வொரு பெரிய ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒரு வாக்கு எண்ணும் மையமும், சிறிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டுக்கு தலா ஒரு வாக்கு எண்ணும் மையமும் அமைக்கப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக ஒரு மாவட்டத்திற்கு 15 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் அலுவலர்கள், வாக்கெண்ணும் அலுவலர்கள் முன்னிலையில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
முதலில் ஒவ்வொரு வாக்கு பெட்டியையும் பிரித்து அதில் பதிவான வாக்கு சீட்டுகள் நிறத்தின் அடிப்படையில் தனித்தனியாக வகைப்படுத்தப்படும். பிறகு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தனித் தனி அறைகளில் 30 முதல் 50 வாக்கு எண்ணிக்கை அலுவலர்களைக் கொண்டு வாக்குகள் எண்ணப்படும்.
வாக்கு எண்ணும் மையங்களில் கட்சி சார்பற்ற பதவிகளான கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை கண்காணிக்க தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தேர்தல் பார்வையாளர்கள் மூலம் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திலும், வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஒலிபெருக்கி மூலம் வெளியிடப்பட உள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரி வாக்கு எண்ணிக்கை முடிவுகளை உடனுக்குடன் மாநில தேர்தல் ஆணையத்திற்கு வழங்கும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை அம்மையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் வெப் ஸ்ட்ரீமிங் முறையில் மாநில தேர்தல் ஆணையத்தில் அமைக்கப்பட்டு உள்ள கட்டுப்பாட்டு அறையில் தேர்தல் ஆணையர் பழனிச்சாமி, செயலாளர் சுப்பிரமணியன் ஆய்வு செய்யும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.