குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மாநில அரசுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியிருக்கிறார். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த சட்டம் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அமல்படுத்தப்பட மாட்டாது என அக்கட்சி ஏற்கனவே அறிவித்துள்ளது. இதேபோல திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும், மேற்கு வங்க மாநிலத்தின் குடியுரிமை சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என கூறியுள்ளார்.
கேரளாவில் கூடிய சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் கொண்டுவந்தார். அப்போது பேசிய அவர் கேரளாவில் தடுப்பு முகாம்கள் அமைக்கப்படாது என்றும் உறுதியளித்தார். பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸும் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்த நிலையில் ஒரே பாஜக உறுப்பினரான ராஜகோபால் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என காங்கிரஸ் கட்சியைச் சேராத ஆந்திரா, பீகார், ஒடிசா முதல்வர்களும் அறிவித்துள்ளனர். காங்கிரஸ் கூட்டணி அரசான மகாராஷ்டிராவில் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என அறிவித்துள்ளது. இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை மாநில அரசுகளுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கவே குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.