குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த போவதில்லை என சில மாநில அரசுகள் தெரிவித்து வரும் நிலையில், இணையதள வழியாக அதை நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த போவதில்லை என்று அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை மாநில அரசுகள் செயல்படுத்தாமல் இருக்க அரசியல் சட்டத்தில் இடமில்லை என மத்திய அமைச்சர் கூறியிருந்தார்.
இந்நிலையில் மாநில அரசுகளின் தலையீடு இல்லாமல் இணையதள வழியாக குடியுரிமை விண்ணப்பங்களை பரிசீலனை மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக மாவட்ட ஆட்சியர்கள் மூலம் குடியுரிமை தொடர்பான விண்ணப்பங்கள் பரிசீலித்து பரிந்துரைக்கப்படுவது நடைமுறை என்ற நிலையில் நேரடியாக இணையதள முறையில் அதை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.