உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை திமுக வேட்பாளர்களும், முகவர்களும் கண்காணிக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள மடலில் நீதியின் மாண்பு காக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் வாக்கு எண்ணிக்கையில் திமுக காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு செல்லும் திமுக மற்றும் தோழமை கட்சியின் வேட்பாளர்களும், முகவர்களும் அங்கே உள்ளாட்சி சட்ட விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுகின்றனவா என்பதை கவனிக்க வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆளும் தரப்பின் அத்துமீறல்களை தடுக்க வேண்டியது அவசியம் என குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், கட்சியின் சட்டத்துறை முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள நம்பிக்கையை மக்களின் தீர்ப்பும் நிச்சயம் நமக்கு வழங்கும் என்றும் புத்தாண்டில் ஜனநாயகத்தின் புத்தாண்டு பிறக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.