அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட துணை நடிகையின் கணவர்
சென்னை அண்ணாநகரில் துணை நடிகையின் கணவர் வேலை செய்ய அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூரில் உள்ள நடராஜன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபிநாத். இவர் அண்ணாநகரில் உள்ள தனியார் விளம்பர நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின் 26ஆம் தேதி காலை ஊழியர் ஒருவர் அலுவலகத்தை திறக்க சென்றார். அதில் அதிர்ச்சி என்னவென்றால் அலுவலகத்தின் கதவு பூட்ட படாமல் இருந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது ஒரு அறைக்குள் கோபிநாத் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அந்த ஊழியருக்கு தூக்கிவாரிப்போட்டது.
அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்த அவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்திருக்கிறார். விரைந்து வந்த ஜேஜே யநகர் காவல்துறையினர் கோபிநாத்தின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். யார் இந்த கோபிநாத் ? எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என பல்வேறு கேள்விகள் காவல்துறை முன் எழத்தொடங்கின.
அது குறித்த விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளன. தற்கொலை செய்துகொண்ட கோபிநாத்துக்கு ரேகா என்ற மனைவி உள்ளார். சினிமாவில் துணை நடிகையாக இருக்கும் இவர் டிவி சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். திருமண வாழ்வு மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில், கணவன் மனைவிக்கு இடையே மூன்றாவது நபர் ஒருவரால் பிரச்சனை ஏற்பட தொடங்கியிருக்கிறது.

கோபிநாத்துக்கும் வேறொரு பெண்ணுக்கும் இடையே திருமணத்தை கடந்த உறவு இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் தம்பதிக்கு இடையே நாளுக்கு நாள் பிரச்சனை அதிகரிக்க இருவருக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட துவங்கியிருக்கிறது. போதாக்குறைக்கு கடன்தொல்லை கோபிநாத்தை துரத்தி இருக்கிறது.
பிரச்சினைக்கு மேல் பிரச்சினையாக நெருக்கடி வந்து கொண்டிருந்த சூழலில் வழக்கம்போல் கோபிநாத்திற்கும் ரேகாவிற்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அவர் 24ஆம் தேதி மாலை அலுவலகத்திற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். அன்று இரவு தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
அலுவலகத்திற்கு மொத்தம் மூன்று சாவிகள் இருப்பதாகவும், அதில் ஒன்று கோபிநாத்திடம் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதை பயன்படுத்தி அலுவலகத்திற்கு சென்ற அவர் வாழ்வின் இறுதி முடிவை தானே தேடிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் கோபிநாத்தின் தற்கொலைக்கு காரணம் என்ன? அதில் வேறு ஏதேனும் மர்மங்கள் அடங்கி இருக்கின்றனவா? என்பதை கண்டறிய விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறது காவல்துறை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




