உள்ளாட்சித் தேர்தல்: தலா 4 ஓட்டு என்பதால் குழப்பம்…! வாக்களிக்க தாமதம்…! வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசை!!

ஊரக உள்ளாட்சித் தேர்தலில், ஒவ்வொருவரும் 4 ஓட்டுகள் பதிவு செய்ய வேண்டியுள்ளதால், வாக்காளர்கள் பலருக்கும் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சின்னங்களை கண்டுபிடித்து பொறுமையாக முத்திரையிட வேண்டியுள்ளதால் தாமதம் ஏற்பட்டு, வாக்காளர்கள் நீண்ட வரிசையில் வெகு நேரம் காக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக 27 மாவட்டங்களில் மொத்தம் 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

ஊரகப் பகுதி உள்ளாட்சிப் பதவிகளுக்கு தேர்தல் என்பதால் ஒவ்வொரு வாக்காளரும் ஊராட்சித் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் என 4 பேரை தேர்வு செய்ய வாக்களிக்க வேண்டும். இதற்காக 4 வாக்குச் சீட்டுகள் தனித்தனியே வழங்கப்படுகின்றன. ஊராட்சித் தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு, உறுப்பினர் பதவிக்கு வெள்ளை, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பச்சை, மாவட்ட கவுன்சிலருக்கு மஞ்சள் நிறம் என 4 வண்ணங்களில் ஓட்டுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.

உள்ளாட்சித் தேர்தல் என்பதால், இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கும் நேரத்திற்கு முன்னரே வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசை கட்டி நிற்க ஆரம்பித்தனர். பின்னர், வாக்குச்சாவடிக்குள் நுழையும் வாக்காளரின் அடையாளம் முதலில் சரிபார்க்கப்பட்ட பின் விரலில் மை வைக்கப்படுகிறது. பின்னர் வரிசையாக அமர்ந்திருக்கும் 4 தேர்தல் அலுவலர்களும், ஆளுக்கொரு வாக்குச் சீட்டை கிழித்து, நான்காக மடித்து மொத்தமாக வாக்காளர்களின் கையில் கொடுத்து முத்திரையிடும் மறைவான பகுதிக்கு அனுப்பி வைக்கின்றனர். ஒவ்வொரு சீட்டாக பிரித்து சின்னங்களை அடையாளம் காண்பதற்குள் பல வாக்காள்கள் குழம்பிப் போய் விடுகின்றனர். பின்னர் பொறுமையாக 4 சீட்டுகளிலும் முத்திரையிட்ட பின், ஒவ்வொரு சீட்டையும் மீண்டும் நான்காக மடித்து ஓட்டுப் பெட்டிக்குள் போட வேண்டியுள்ளது.

 

இதனால், ஒரு சில வாக்காளர்களுக்கு 2 நிமிடத்திற்கும் மேலாகி விடுகிறது.இந்த தாமதத்தால் வாக்காளர்கள் ஏராளமானோர் வாக்குச்சாவடிகள் என் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் வாக்குப்பதிவு சதவீதமும் விறு விறுவென உயராமல் மந்த கதியில் உள்ளது. பகல் 12 மணி வரை பல பகுதிகளில் 30 சதவீதத்தைக் கூட தாண்டவில்லை.

 

இந்தத் தேர்தலில் முக்கியமாக ஊராட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றத் தான் பல ஊர்களில் கடும் போட்டி நிலவுகிறது. உள்ளுரில் வெற்றியை கவுரவப் பிரச்னையாகக் கருதி, வெளியூர்களில் வசிக்கும் ஆதரவு வாக்காளர்களை தேடித் தேடி அழைத்து வந்து வாக்களிக்க வைப்பதால், வாக்குப்பதிவு சதவீதம் 90 ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வாக்களிக்க ஏற்படும் தாமதத்தால், வாக்குப்பதிவு நேரம் 5 மணிக்கு முடிந்தாலும் அதன் பின்னரும் வரிசையில் நிற்போர் எண்ணிக்கை கணிசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 5 மணிக்கு வரிசையில் நிற்போருக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நீட்டிக்கப்படும் எனத் தெரிகிறது.


Leave a Reply