திருடுபோன காரை கண்டுபிடிக்க உதவிய ‘ஃபாஸ்ட்டேக்’
புனேவில் திருடு போன காரை ஃபாஸ்ட்டேக் முறையை பயன்படுத்தி எளிதாக காவல்துறையினர் கண்டுபிடித்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இந்தியாவில் வாகனங்களுக்கான மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் ஃபாஸ்ட்டேக் முறை ஜனவரி 15-ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சுங்கச்சாவடியை கடக்கும்போதும் மின்னணு முறையில் கட்டணத்தை பிடித்தம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் புனேவில் உள்ள கர்வே நகர் என்ற இடத்தில் வசிக்கும் ராஜேந்திர ஜக்தே என்பவரின் கைபேசிக்கு அதிகாலை 4.30 மற்றும் 5.50 மணிக்கு ஃபாஸ்ட்டேக் மூலம் பணம் வசூலிக்க பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜக்தே வாசலுக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது எஸ்யூவி கார் திருடு போய் இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
ஃபாஸ்ட்டேக் மூலம் கடைசியாக கட்டணம் செலுத்தப்பட்ட சுங்கச்சாவடிகளையும், அதன் மூலம் கார் செல்லும் வழியையும் ஜிபிஎஸ் வசதியுடன் காவல்துறையினர் தேடினர். பின்னர் தானே என்ற இடத்தில் காவல்துறையினர் கண்டறிந்து மீட்டனர். உரிமையாளர் ஜக்தேயிடம் காரை ஒப்படைத்த காவல்துறையினர் அதை திருடி சென்ற நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




